ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து மாத்திரமல்ல, ஏனைய பல கட்சிகளிலிருந்தும் பலர் தம்முடன் இணையவுள்ளதாகவும், முற்பகலில் ஜனாதிபதியை விமர்சிப்பவர்கள் பிற்பகலில் அவருடன் இணைவதற்கு விருப்பம் தெரிவிக்கின்றனர் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்தோடு வெகுவிரைவில் ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் சக்தியும் மீண்டும் இணைந்து பயணிக்கும் என்றும் இரண்டு கட்சிகளும் இணைவது நாட்டுக்கு நன்மையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அநுராதபுரத்தில் ஐ.தே.க. அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ருவான் விஜேவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது எனவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போதும் ஐக்கிய தேசிய கட்சியே அதனை மீளக் கட்டியெழுப்பியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இம்முறை இடம்பெற்ற சம்பவங்களின் அடிப்படையிலும் ஐ.தே.க.விற்கு சிறந்த எதிர்காலம் காணப்படுகிறது என்பது தெளிவாகிறது என்றும் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.