பேரினவாதிகளை சார்ந்து செயற்படும் தொல்லியல் திணைக்களம்- சபையில் றிசாட் பதியுதீன் முழக்கம்!samugammedia

தொல்லியல் திணைக்களம் என்பது ஒரு இனத்திற்கானதோ அல்லது ஒரு மதத்திற்கானதோ அன்றி பொதுவாக நாட்டிற்கானது என்றும் திருகோணமலை மாவட்டத்தில் வாழும் முஸ்லீம் ,தமிழ் மக்களிற்கெதிரான அட்டூழியங்களிற்கு  எதிராக கேள்வி கேட்க யாருமில்லை என  எண்ண வேண்டாமெனவும்  பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம்(04) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

நாட்டில் வாழ்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியினை அமைக்க துடித்த ஆட்சியாளர்களும் பேரினவாத சிந்தனையுடன் இனவாதத்தினை மூலதனமாகவும்  கொண்டு தேர்தல் பிரசாரங்களிற்கும் பயன்படுத்தியதன் விளைவே இன்று நாடு பொருளாதார நிலையில் பின்தங்கிய நிலைக்கு சென்றமைக்கு காரணமாகும்.

அத்துடன் இன்று பிச்சையெடுக்கும் நாடாகவும், கையேந்துகின்ற நாடாகவும் மாறியுள்ளது.

இதற்கு, இனவாத அரசியல் தலைவர்களுடன் நாட்டில் இடையிடையே மதவாதத்தினை தூண்டிய மத குருமார்களுமே பொறுப்பினை ஏற்றுக்கொள்ள  வேண்டும்.

புல்மோட்டை பகுதியில் அரிசி மலையிலிருக்கும் தேரர் தனது அடியாட்களுடன் ஆயுதம் தாங்கிய நிலையில் பொன் மலை குடாப்பகுதியில் அவரது பன்சலையிலிருந்து 500 மீட்டரிற்கு அப்பால், ஒரு பௌத்த குடும்பம் கூட வசித்து வராத நிலையில் சிலை வைப்பதற்கான அராஜகத்தினை மேற்கொண்டுள்ளார்.

நாடு கடினமான பொருளாதார நெருக்கடியில் இருக்கின்ற சூழலில் இனவாதம் மற்றும் மதவாதங்களை ஏற்படுத்தி எதனை சாதிக்க போகின்றனர்?

புல்மோட்டையில் வாழுகின்ற மக்கள்  அடுத்த தலைமுறைக்கு காணிகள் இல்லாத நிலையிலும், மீன் பிடிப்பதுடன்  விவசாயம் செய்து வருபர்களிற்கு உரியளவிலான விவசாய நிலங்களே பற்றாக்குறையாக உள்ளது.

தொல்லியல் திணைக்களம் என்பது ஒரு இனத்திற்கானதோ அல்லது ஒரு மதத்திற்கானதோ அல்ல. அது நாட்டிற்கானது. இந்நிலையிலே , 12 00 ஏக்கர் நிலம்  தொல்லியல் திணைக்களத்தினால் ஒதுக்கப்பட்டு அதனை அந்த தேரரிடமே பொறுப்பாக அளிக்கப்பட்டு  அவருடைய உறவினர்கள்  வெளிமாவட்டங்களில் இருந்து வந்து விவசாயம் செய்வதற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கெதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து தடுத்துள்ளனர். அத்துடன் பொன்மலை பகுதியில் புத்தர்  சிலையினை வைப்பதன் மூலம் புதிய குடியேற்றங்களை குடியமர்த்துவதற்கான சதி திட்டம் தீட்டப்படுகின்றது. இதனை ஜனாதிபதி பாராமுகமாக இருக்க கூடாது.

திருகோணமலை மாவட்டத்தினை  பொறுத்தமட்டில் முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களிற்காக யாரும் கேள்விகள் கேட்கமாட்டார்கள் என்று எண்ணிக்கொள்ள வேண்டாம்.

அங்கு 44% மக்களிற்கு 368 சதுர கிலோமீட்டர் காணியும், 24% மக்களிற்கு 585 சதுர கிலோமீட்டர் காணியும் ஆனால் 24% இருக்கும் சிங்களவர்களிற்கு  1690 சதுர கிலோமீட்டர் காணிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறாக பல்லாயிர  கணக்கான ஏக்கர் காணிகளை தொல்லியல் திணைக்களத்தின் பெயரிலே அடாத்தாக பிடித்து வைத்துக் கொண்டுள்ளதுடன் அங்குள்ள மக்களையும் கஷ்டப்படுத்திவேற்று மாவட்ட மக்களை குடியமர்த்தும் வேலையினை மதகுருமார்கள் கைவிட வேண்டும்.

இல்லையெனில் இவருக்கெதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் குறித்த சாதுவுடன் ஆயுததாரிகளாக சென்று மக்களை அச்சுறுத்தியவர்களையும் யாரென கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply