போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது: அரசாங்கம் அறிவிப்பு! samugammedia

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தடையான போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது எனவும் தொழிற்சங்கங்களின் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு அடிபணிய போவதில்லை என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பேருவளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது  இவ்வாறு தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் எடுத்த கடுமையான தீர்மானங்களின் பயனை நாட்டு மக்கள் தற்போது பெற்றுக்கொண்டுள்ளார்கள் எனவும் பொருளாதார முன்னேற்றத்தின் பயனை மக்களுக்கு நிச்சயம் வழங்குவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் மாத்திரம் வலியுறுத்துகின்றன எனவும் நாட்டு மக்கள் தேர்தலை கோரவில்லை மாறாக பொருளாதார நெருக்கடிக்கு தீர்வினை கோருகிறார்கள் என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

பொருளாதாரம் ஸ்தீரமடைந்த பின்னர் எந்த தேர்தலையும் நடத்தலாம் எனவும் எவரும் போட்டியிடலாமென்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், ஜனநாயக போராட்டங்களுக்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாகவும் ஜனநாயகம் என்ற ரீதியில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் உண்மையில் ஜனநாயக போராட்டமா? என்பதை மக்கள் ஆராய வேண்டும் என்றும் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

மக்களாணையுடன் ஆட்சிக்கு வர முடியாத தரப்பினர் போராட்டங்கள் ஊடாக ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற முயற்சித்தார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அது பாரதூரமான விளைவை ஏற்படுத்தியதாக தெரிவித்த பிரமித பண்டார தென்னகோன், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான போராட்டங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *