தமிழர் தாயகத்தில் முடிவின்றி தொடரும் நில அபகரிப்பு மற்றும் சிங்கள குடியேற்றங்கள் தொல்லியல் வரலாறுகளை மாற்றியமைத்தல் பௌத்த மயமாக்கல் போன்ற ஐனநாயக சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த ஒரே வழி வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அரசியல் அதிகாரங்களை பெறுவதே ஆகும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சமஷ்டி அரசியல் தீர்வு தமிழ் மக்களது இறுதி இலக்காக இருந்தாலும் தொடர்ச்சியான இனவழிப்பை தடுக்க இடைக்கால ஏற்பாடாக தற்போது நடைமுறையில் இருக்கின்ற ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் உள்ள மாகாணசபைகளுக்கான அரசியல் அதிகாரங்களை பெறுவதே சிறந்த தற்காப்பு நடவடிக்கை ஆகும்
மாகாணசபைகளுக்கான காணி மற்றும் காவல்த்துறை, நீதி, நிதி போன்ற அரசியல் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப் பெற முடியாத சட்ட ஏற்பாடுகளுடன் விரைந்து பெற்றுக் கொள்வதே எஞ்சிய தாயக இருப்பை பாதுகாக்க இருக்கும் இறுதி வழி.
இதனை நிராகரித்து வெறும் எதிர்ப்புக்கள் கூப்பாடுகள் மூலம் ஏதேச்சதிகாரம் கொண்ட சிங்கள பேரினவாத ஆட்சியாளரை தடுத்து நிறுத்த முடியாது.
மாகாணசபைக்குரிய அதிகாரங்களை மீளப் பெற வேண்டுமாயின் மாகாணசபைகளில் ஒரு தீர்மானத்தை மூன்றில் இண்டு பெரும்பண்மையுடன் நிறைவேற்றுகின்ற சட்ட ஏற்பாடுகள் இருக்குமாயின் சிறந்த இடைக்கால ஏற்பாடாகவும் மாகாண அதிகாரங்களுக்கான பாதுகாப்பாகவும் இருக்கும். இவ்வாறான அதிகாரங்களை பெற்று மாகாணசபையை பலப்படுத்துவதன் மூலமே எதிர் காலத்தில் நிரந்தர சமஷ்டி தீர்வையோ அல்லது ஒரு பொதுசன வாக்கெடுப்பு நோக்கி செல்வதற்கோ வழி திறக்கும் என தெரிவித்தார்.