இலங்கையில் நடமாடும் வியாபாரம், யாசகம் பெறுவதற்கு தடை! – அதிரடி அறிவிப்பு samugammedia

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து சங்கங்கள் இணைந்து 7000 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரெண்டா தெரிவித்தார்.

புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து வசதிகள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. 

இதன் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 4000 பேருந்துகளும் , 3000 தனியார் பேருந்துகளுமே இவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. 

வெள்ளிக்கிழமை (07) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

07ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை கொழும்பிலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்வதற்கும், 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை வெளி மாவட்டங்களிலிருந்து கொழும்பிற்கு வருவதற்கும் மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

குறித்த பேருந்துகளில் பயணகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸாரினால் நடமாடும் கண்காணிப்பு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு கடற்படை மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புக்களும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.

மேலும் சந்தைப்பகுதிகளுக்குச் செல்வதற்காக மேலதிகமாக 300 பேரூந்துகள் தற்காலிகமாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. 

பண்டிகைக் காலத்தில் பேரூந்துகளில் நடமாடும் வியாபாரங்கள் மற்றும் யாசகம் பெறுதல் என்பவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு 6 மணித்தியாலங்களுக்குள் போக்குவரத்து கட்டணங்களும் குறைக்கப்பட்டன.

இதன் பயன் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய புதிய கட்டண திருத்தங்களை காட்சிப்படுத்தத் தவறும் இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பேருந்து நடத்துனர்கள் மற்றும் சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அடுத்த கட்டமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே கூடுதல் கட்டணம் அறவிடப்படுகின்றமை தொடர்பில் பயணிகள் உரிய இடங்களில் முறைப்பாடாளிக்கலாம் என்றார்.

Leave a Reply