நாட்டில் சட்டம் இயற்றும் இடம் மற்றும் நீதி பரிபாலிக்கும் இடங்களில் பல பிரச்சினைகள்- யாழ்.பல்கலை துணைவேந்தர் சுட்டிக்காட்டு..!samugammedia

தற்சமயம் நாட்டில் சட்டம் இயற்றும் இடம் மற்றும் நீதி பரிபாலிக்கும் இடங்களிலே பல பிரச்சினைகள் காணப்படுகின்றன என யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சிவக்கொழுந்து ஸ்ரீ சற்குணராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இன்று(08) இடம்பெற்ற சிறைச்சாலை நூலகம் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்திலேயே வெளிப்படையாக பாராளுமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளதாக உறுப்பினர்கள் வெளிப்படையாகப்  பேசுகின்றனர். இதை விட
அண்மையில்  போதைப்பொருட்களுடன் பொலிஸ் அதிாரிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவமும் பதிவாகியுள்ளது.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு கிறிஸ்து செய்த குற்றத்திற்காக வீதி வீதியாக இழுத்துச் சென்று துன்புறுத்தப்பட்ட நிகழ்வை நினைவு கூர்ந்து பெரிய வெள்ளி அண்மையில் கொண்டாடப்பட்டது.

ஆனால்  தற்காலத்தில் இந் நிலை முற்றுமுழுதாக மாற்றமடைந்துள்ளது.  குற்றச் செயல்களைச்  செய்தாலும் கைதிகள் சிறைச்சாலையினுள்ளே மனிதாபிமான முறையில் நடாத்தும் நிலை காணப்படுகின்றது.

எனவே, தெரிந்தோ தெரியாமலோ  ஏதோ ஒரு குற்றத்தைச் செய்ததன் விளைவாக சிறைச்சாலையினுள் தண்டணையை அனுபவிக்கின்றீர்கள். இவ்விடம் திருந்துவதற்கான இடமேயாகும். எனவே இவ் இடத்திற்கு மீண்டும் வருகை தராதபடி நற்பிரஜைகளாக மாற்றமடைய வேண்டும். அதற்காகவே சிறைச்சாலையினுள்ளே நூலகமொன்றை நிறுவியுள்ளோம். எனவே இதனை பயன்படுத்தி பூரண பயனடையுமாறு கேட்டுக்கொள்கின்றேன். –  என்றார்

Leave a Reply