சிறைச்சாலைக்கு கைதிகளாக வருகைதரும் 75 சதவீதமானோர் தொடர்பில் வெளியான தகவல் samugammedia

சிறைச்சாலைக்கு கைதிகளாக வருகை தருவோரில் 75 சதவீதமானோர் கல்வியறிவைப் பெற்றவர்கள் என்று யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் உதயகுமார் தெரிவித்தார்.

யாழ் . சிறைச்சாலையில் நேற்றுச் சனிக்கிழமை இடம்பெற்ற நூலக அங்குரார்ப்பண நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறைக் கைதிகளை கைதிகள் என அழைக்கக் கூடாது. மாறாக சிறைச்சாலைக்குள் வருபவரை எங்களுள் ஒருவராகப் பார்க்க வேண்டும். 

சிறைச்சாலைக்கு வருபவரை எங்களுடைய கடமையின் நிமித்தம் நல்ல ஒரு மனிதராக மாற்றி சமூகத்துக்கு விடுவதே எமது நோக்கமாகும்.

புனர்வாழ்வுக்கு சிறைக்கைதிகளை உட்படுத்துவது 100 வீதம் வெற்றியளிக்கின்றதா என்பது சந்தேகத்துக்குரிய ஒன்றாகக் காணப்படுகின்றது. 

ஏனெனில் சிறைச்சாலையில் புனர்வாழ்வு பெற்றுச் சென்றவர்களில் பலர் மீண்டும் சிறைக்கு வருகின்றனர். அத்துடன் கல்வியறிவைப் பெற்ற 75 சதவீதமானவர்களே கைதிகளாக வருகின்றனர்.

எழுத படிக்கத் தெரியாதவர்கள் கைதிகளாக வருவது குறைவே. அவர்களுக்கு நாம் வெவ்வேறு விதமான புனர்வாழ்வை வழங்கவேண்டும்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக கைதிகள் நினைத்த நேரத்துக்குச் சென்று புத்தகத்தை எடுத்து வாசிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. ஆனால் தற்பொழுது இரவு நேரத்தில் கூட சிறைக்கைதிகள் புத்தகங்களை எடுத்து வாசிக்கும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கிருக்கக்கூடிய கைதிகள் அனைவரும் வாசிப்பார்கள் என்று உறுதியாகக் கூறமுடியாது. ஒரு கைதி வாசிக்கும் பொழுது ஒருவரைப் பார்த்து மற்றவர் பழகுவார் – என்றார்.

Leave a Reply