வடமாகாணத்தில் பரவ ஆரம்பித்திருக்கும் தென்னை வெண் ஈ யை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் தே.வைகுந்தன் தெரிவித்தார்.
இன்று கிளிநொச்சியில் உள்ள தென்னை பயிர்ச்செய்கை சபையின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் ,
அமெரிக்காவின் பிறப்பிடத்தைக்கொண்ட வெண் ஈ தாக்கமானது கடந்த வருடம் எமது அயல் நாடான இந்தியாவில் பரவ ஆரம்பித்திருந்தது. தொடர்ந்து எமது நாட்டின் தென்னை முக்கோண வலயத்திலும் பரவ ஆரம்பித்திருந்த நிலையில் தற்போது வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலும் அவதானிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் இதன் தாக்கம் இனி வரும் காலம் வடமாகாணத்தில் வெப்பமான காலநிலை என்பதால் வேகமாக பரவக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது. எனவே தென்னை செய்கையாளர்கள் தங்களுடைய தென்னை தோட்டங்களில் இவற்றின் தாக்கம் காணப்பட்டால் உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .
இவற்றின் தாக்கம் தென்னை மாத்திரம் இன்றி வேறு பயிர்களான கமுகு, தேக்கு, பப்பாசி போன்றவற்றையும் தாக்கக்கூடியது. வெண் ஈ இன் தாக்கம் காணப்பட்டால் உடனடியாக கள உத்தியோகத்தர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.