மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்ய புலம்பெயர் மக்கள் முன்வரவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கனடிய தமிழர் பேரவையினால் ஒரு தொகை மருந்துப்பொருட்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டது.
நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியசாலைகளில் கடுமையான மருந்து தட்டுப்பாடுகள் நிலவிவரும் நிலையில் வறுமை நிலையில் உள்ள மக்கள் மருந்துகளைப் பெற்றுக்கொள்வதில் மிகவும் கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் கனடிய தமிழர் பேரவை கனடாவில் முன்னெடுத்த நடை பவனி மூலம் கிடைக்கப்பெற்ற நிதிகள் மூலம் இலங்கையில் உள்ள ஆறு வைத்தியசாலைகளுக்கு மருந்துப்பொருட்களை வழங்கவுள்ளது.
இதன் கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சுமார் 10மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கே.கலாரஞ்சனி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கனடிய தமிழர் பேரவை உறுப்பினர் துரைரெட்னம் துஸ்யந்தன் உட்பட வைத்தியர்கள்,வைத்தியின் பிரதிப்பணிப்பாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கீழ் உள்ள புற்றுநோயாளர்கள் வைத்தியசாலையில் பாரியளவில் மருந்து தட்டுப்பாடு காணப்படுவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை மக்களுக்கு காணப்படுவதாகவும் இங்கு வைத்தியர்களினால் தெரிவிக்கப்பட்டது.
புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை குறைப்பதற்கான உதவியை வழங்கமுன்வரவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.