ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தற்போது மூன்றாகப் பிளவுபட்டுள்ள நிலையில், அக்கட்சியில் உள்ள எம்.பிக்கள் சிலர், அடுத்தகட்ட நகர்வு பற்றி முடிவெடுப்பதில் குழப்பிப் போயுள்ளனர்.
டலஸ் தலைமையில் அணியொன்று வெளியேறிவிட்டது. பிரசன்ன ரணதுங்க, கஞ்சன விஜேசேகர, ரொஷான் ரணசிங்க என ரணில் விக்கிரமசிங்க பக்கம் மற்றுமொரு அணி நிற்கின்றது. ராஜபக்சக்களுக்கு விசுவாசமாக ஒரு அணி செயற்பட்டு வருகின்றது.
இந்நிலையில் எதிரணிக்குப் போக வேண்டிய நிலை ஏற்பட்டால் என்ன செய்வதென்று மொட்டுக் கட்சிக்குள் உள்ளக கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
அவ்வாறு சென்றால் நாமல் ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக்க வேண்டும் என மொட்டுக் கட்சிக்குள் ஒரு அணி எடுத்துரைத்துள்ளது.
இதைவிடவும் பஸிலை நாடாளுமன்றம் அழைத்து வந்து அவரை எதிர்க்கட்சித் தலைவராக்குவது நல்லது என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்வதெனில் பஸில் இரட்டைக் குடியுரிமையை துறக்க வேண்டும். தேசியப்பட்டியலை விட்டுக்கொடுக்க ஜயந்த கெட்டகொட தயார் என ஒரு எம்.பி. தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை ரணில் விக்கிரமசிங்கவுடன் இருப்பதுதான் நல்லது என்ற ஆலோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது என அரசல் புரசலாகக் கதை அடிபடுகின்றது.