வடக்கு கிழக்கில் எதிர்வரும் 25ம் திகதி கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு…! வெளியான அறிவிப்பு..!samugammedia

வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பு, தொல்பொருள் சின்னங்கள், மரபுரிமைகள் அழிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக எதிர்வரும் 25ம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் கதவடைப்பு போராட்டத்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகளிற்கிடையில் இன்று நடந்த கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முழுமையான கதவடைப்பு போராட்டத்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளில் பாராளுமன்றத்திற்குள்ளும் போராட்டம் நடத்தப்படும்.

தமிழ் மக்களின் இந்த போராட்டத்திற்கு ஏனைய முஸ்லிம், மலையக அரசியல் கட்சிகளின் ஆதரவும் கோரப்பட்டது. இந்த போராட்டத்தை ஆதரிப்பதாக முஸ்லிம், மலையகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.

அத்துடன், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் இந்த போராட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது.

இன்று (17) யாழ்ப்பாணம், கல்வியங்காட்டிலுள்ள, ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,ஜனநாயக போராளிகள் கட்சியினர், தமிழ் தேசிய கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இன்றைய சந்திப்பில் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் 25ஆம் திகதி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. இதனால், அன்றைய தினத்தில் வடக்கு கிழக்கு தழுவிய கதவடைப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

அதேநாளில், பாராளுமன்றத்தை முடக்கும் விதமாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு போராட்டத்தை முன்னெடுப்பார்கள்.

இந்த போராட்ட ஏற்பாடு தொடர்பில் இன்றைய கூட்டத்திலிருந்தபடியே ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் தலைவர்களுடன் கலந்துரையாடப்பட்டது. அவர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அத்துடன், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் போராட்டத்தில் தாமும் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளனர்

Leave a Reply