தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டால் பொதுஜன பெரமுன கட்சிக்கே முன்னுரிமை வழங்கவேண்டும் என்றும் ஏன்எனில் ஜனாதிபதியை தெரிவு செய்தது தாமே என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே வலியுறுத்துகின்றார்.
பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு வலியுறுத்தியிருந்தார்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.குறுகிய காலத்திற்குள் நாடு வழமை நிலைக்கு திரும்பியுள்ளது.
நெருக்கடியான நேரத்தில் சவால்களை பொறுப்பேற்காத தரப்பினர் தற்போது அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார் என குறிப்பிடுகிறார்கள்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை முழுமையாக பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அரசாங்கம் ஸ்திரமான தன்மையில் காணப்பட வேண்டும்.
சகல தரப்பினரின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வதன் அவசியம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 25 ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு தெளிவுப்படுத்துவார்.
பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த போது அரசாங்கத்தில் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்த போது எவரும் அரசாங்கத்துடன் ஒன்றிணையவில்லை. நாடு வழமைக்கு திரும்பிய பின்னர் தற்போது அரசாங்கத்துடன் இணைய எதிர்தரப்பினர் அவதானம் செலுத்தியுள்ளார்கள் என தெரிவித்தார்.