ஐ.நாவில் இலங்கை படுதோல்வி; சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கு கிடைத்த வெற்றி! samugammedia

இலங்கையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட முன்னாள் தமிழீழ விதலைப்புலி போராளி சார்பாக சர்வதேச சிவில் மனித உரிமைப் பட்டயத்தின் நெறிமுறையின் (Optional protocol) கீழ், ஐ. நா மனித உரிமை ஆணைக்குழு முன்பாக  சட்ட நடவடிக்கை ஒன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 2014ஆம் ஆண்டு ஆரம்பித்து இருந்தது. 

இச் சட்ட நடவடிக்கைக்கு ராஜா வழக்கறிஞர் (King’s Counsel ஜெஃப்ரிறொபேர்ட்ஸனை (Geoffrey Robertson)  முன்னாள் தமிழீழ விதலைப் புலிப் போராளி சார்பாக நியமித்து இருந்தது. மனித உரிமை ஆணைக்குழுவின் முக்கியத்துவம் வாய்ந்த இத் தீர்ப்பு இலங்கையில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட அனைவருக்கும் கிடைத்த வெற்றியாகும்.

இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு,  ஒரு மாதமாக பொலிஸாரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு,  பின்னர் சுவிற்ஸர்லாந்துக்கு தப்பிச் சென்ற முன்னாள் தமிழீழ விதலைப்புலிப் போராளி  தொடர்பான சட்ட நடவடிக்கையில் பங்கேற்ற  17 சர்வதேச நீதிபதிகளாலும் இலங்கை  அரசாங்கம் கண்டிக்கப்பட்டுள்ளது. 

பலமான தாக்குதல்கள், மின் அதிர்ச்சி, பாலியல் வன்புணர்வு ஆகிய சித்திரவதைகள் சுவிஸ் வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்பட்டது. 

இச் சித்திரவதையை இலங்கை அரசாங்கம் மறுத்தபோதிலும், மனித உரிமை ஆணைக்குழு அம் மறுப்பை நிராகரித்தது. 

மேலும், குறித்த நபர் இலங்கையிலேயே பயன் தரக்கூடிய உள்நாட்டு தீர்வுகளை நாடி இருக்கலாம் என்ற வாதத்தை மனித உரிமை ஆணைக்குழு நிராகரித்தது. இத் தீர்ப்பு பயன் தரக்கூடிய  உள்நாட்டு தீர்வுகள் எதுவும் இலங்கைவில் இல்லை என்பதை நிரூபித்துள்ளது.

இலங்கையை சுயாதீனமாக, காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைக்கு பொறுப்பான பொலிஸாரை விசாரணை செய்யுமாறும், அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து தண்டிக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறும் ஐ.நா, மனித உரிமை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. 

மேலும், பாதிக்கப்பட்ட நபருக்கு போதுமான நட்டஈட்டை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும், இவ்வாறான நடத்தை மீண்டும் நடைபெறாமலிருக்க இலங்கை கட்டாயம் தனது சட்டங்களை மாற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது.

Leave a Reply