யாழில் அம்மன் சிலையை வைத்தவர்கள் இராணுவ புலனாய்வாளர்களே! நாகபூசணி அம்மனுடன் விளையாடாதீர்கள்..! – வேலன் சுவாமிகள் எச்சரிக்கை samugammedia

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் நாகபூசணி அம்மன் சிலையை வைத்ததன் பின்னணியில், இராணுவ புலனாய்வு பிரிவினர் உள்ளனர் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரியக்க இணை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் குற்றம் சாட்டியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ் தேசியத்தை சிதைப்பதற்காக தமிழ் தேசியத்திற்கு அந்நியமான சக்திகளே மத பிரச்சனைகளை தோற்றுவிக்கின்றன.

தூய சைவ சமயம் என்பது மத சார்பு அல்லாதது. எங்களுடைய தமிழ் தேசிய பயணம் என்பதும் மத சார்பற்ற பயணமாகும். நாங்கள் சைவ தமிழ் தேசியம் என்றோ , கத்தோலிக்க தமிழ் தேசியம் என்றோ பயணிக்கவில்லை.

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்துக்கள், கத்தோலிக்கர் என வேறுபாடுகள் இன்றி அனைவரும் தமிழர்கள் என ஒற்றுமையாக இருந்தோம்.

கத்தோலிக்கர்கள் சைவர்களுடன் நல்லுறவை பேணுகின்றார்கள். கத்தோலிக்கர்களும் மத மாற்ற சபைகளை எதிர்க்கின்றார்கள்.

இந்து கடவுள்களின் சிலைகள் அனுமதியின்றி வைக்கப்படுவது தவறான காரியம். அதுவொரு சட்டவிரோத செயற்பாடாகும்.

இலங்கை, இராணுவ புலனாய்வு பிரிவினரே சிலைகளை அனுமதியின்றி வைக்கின்றார்கள் எங்களுடைய மக்களோ சைவர்களோ இந்த சிலைகளை வைக்கவில்லை. சிலை வைப்புக்களுக்கு பின்னால் இராணுவ புலனாய்வாளர்கள் உள்ளனர்.

நயினாதீவில் ஆலயத்தினுள் சக்தி வாய்ந்தவளாக அம்மன் இருக்கும் போது, நாகபூசணி அம்மன் சிலையை வெட்ட வெளியிலே கொண்டு வந்து வைத்து அம்மனின் சக்தியை ஏன் குறைக்கிறீர்கள்? நாகபூசணி அம்மன் உடன் விளையாடாதீர்கள். அம்மனுக்கு நிச்சயம் பதில் சொல்ல வேண்டி வரும்.

புத்தர் சிலை வந்து விடும் என்கின்றார்கள். புத்தர் சிலை வந்தால் , அது சட்டவிரோதமானது என அதற்கு எதிராக போராட்டம் நடத்தலாம். புத்தர் சிலை வந்து விடும் என்பதற்காக இந்து கடவுள்களின் புனிதத்தை இல்லாததாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட கூடாது.

அதனால் கண்ட கண்ட இடங்களில் இரவோடு இரவாக இந்து கடவுள்களின் சிலைகளை பிரதிஷ்டை செய்வதனை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றார்.

Leave a Reply