சந்நிதி ஆலய சூழலில் தேவாலயம் அமைக்க அனுமதி வழங்கவில்லை- முன்னாள் தவிசாளர் நிரோஷ் மறுப்பு…!samugammedia

சந்நிதி ஆலயத்திற்கு அருகில் தேவாலயம் அமைப்பதற்கு நான் அனுமதி வழங்கியதாக வெளியாகிய செய்திகளில் உண்மை கிடையாது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.

முறைப்படியாக வீடு ஒன்றிற்கே அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவ் அனுமதியின் பிரகாரம் அமைக்கும் வீட்டை தேவாலயமாக மாற்றினால் உரிய சட்ட நடவடிக்கையினை பிரதேச சபை ஊடாக மேற்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அச்சுவேலி ஊடாக சந்நிதி செல்லும் வீதியில்   பிரதேச சபையில் விண்ணப்பித்து வீட்டிற்கான கட்டிட அனுமதி ஒருவரினால் பெறப்பட்டுள்ளது. அவ்வாறாக அனுமதி பெற்றவர் கட்டம் ஒன்றை அமைக்க முயற்சித்த போது, சந்நிதி ஆலய நலன் விரும்பிகள் செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தேவாலயம் அமைக்கப்படுவதாக என்னிடம் முறையிட்டனர்.

அம் முறைப்பாடுகளில் ஒன்று தனது நெருங்கிய உறவினர் காணியில்  மோசடியாக கட்டிடம் அமைக்கப்படுவதாகவும் அமைந்திருந்தது.

முறைப்பாடுகளின் பிரகாரம் எமது உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுக்க சென்றபோது கட்டிடம் அமைப்பவர் முறைப்படி வீடு அமைப்பதற்கான அனுமதி பெற்றிருந்தமை தெரியவந்தது.  ஏற்கனவே எம்மால் வழங்கப்பட்ட அனுமதியை முறைப்பாட்டின் பிரகாரம் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தியபோது,  விண்ணப்பதாரி காணியை முறைப்படி பெற்றுள்ளமைக்கான ஆவணங்கள் எமக்கு ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

இவற்றிற்கும் மேலதிகமாக, வீடு என்ற போர்வையில் தேவாலயம் அமைகின்றதா என ஆராயுமுகமாக, விண்ணப்பதாரியை நான் நேரில் அழைத்து சபையில் விளக்கம் கேட்டபோது –  தான் ஒரு இந்து மதத்தினைச் சேர்ந்த முன்னாள் போராளி எனவும் தான் வாழ்வதற்காக பலரிடம் உதவி பெற்று தனக்கான வதிவிடம் ஒன்றை அமைப்பதாகவும் அவர் என்னிடம் உறுதியளித்திருந்தார்.

அனைத்து மதங்களின் உரிமைகளையும் மதிப்பவனாக கடமையாற்றும் நான் மேற்படி விண்ணப்பதாரியிடம், செல்வச் சந்நிதி ஆலயத்திற்கு அண்மையான பகுதி ஆலய திருவிழா காலங்களில் ஒருவழிப்பாதையாக நடைமுறைப்படுத்தப்படும் முழுமையாக இந்துக்களைக் கொண்ட சமய சம்பிரதாயங்களுடனும் ஆலய நடவடிக்கைகளுடனும் தொடர்பான பகுதி என்பதன் அடிப்படையில் எனக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரமும் தாங்கள் அப்பகுதியில் தேவாலயம் அமைத்தால் அது சமூக அமைதிக்குப் பங்கம் ஏற்படும் என்பதை தெரிவித்திருந்தேன். எனவே அவ்வாறாக எச் சந்தர்ப்பத்திலும் தாங்கள் செயற்பட முடியாது எனவும் அறிவுறுத்தியிருந்தேன். அதற்கு விண்ணப்பதாரி முழுமையாக தான் இணங்குவதாகவும் சட்டப்படி தான் குடியிருப்பதற்கான இல்லத்தினையே அமைப்பதாகத் தெரிவித்திருந்தார்.

தேவாலயம் அமைக்கப்படுவதாக சந்தேகித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதனால் விண்ணப்பதாரி சபையின் அனுமதிக்கு முரணாக எதாவது கட்டிட வேலைகளைச் செய்கின்றாரா என்பது பற்றி பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் பல தடவைகள் எனது அறிவுறுத்தலின் பிரகாரம் சோதனையிட்டுள்ளனர் என்பதுடன் எனது பதவி முடிவுற்றதன் பின்னர் சபையின் செயலாளரிடம் அப் பொறுப்பினை கையளித்துள்ளேன்.

எல்லோருடைய மத சுதந்திரங்களையும் நான் மதிக்கும் அதேவேளை சமயம் என்ற போர்வையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை எதிர்க்கின்றேன். ஆகவே சில வேளை எவராவது வீடு ஒன்றிற்கு சட்டத்தில் காணப்படுகின்ற இடைவெளியைப் பயன்படுத்தி அனுமதி பெற்றுவிட்டு அதனை தேவாலயமாகவோ அல்லது வேறு எந்த நோக்கம் கருதியதாகவே பிரதேச சபைச்சட்டத்தில் பயன்படுத்த முடியாது என்பதை வெளிப்படையாகவே தெரிவித்துக் கொள்கின்றேன். அவ்வாறான நிலையில் பிரதேச சபை நடவடிக்கை எடுக்க பொறுப்புடையது.

இந்த மேற்படி விண்ணப்பதாரி தேவாலயம் அமைக்கின்றார் என முறைப்பாடு கிடைக்கப்படுகின்றன என்பதை வைத்துக்கொண்டு, நாம் அவர் எதிர்காலத்தில் அக் கட்டிடத்தை தேவாலயமாகப் பயன்படுத்துவார் என்ற சந்தேகங்களின் அல்லது எதிர்வுகூறலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் முடியாது. தவறு இடம்பெற்றாலே அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும்.

இந் நிலையில் தவிசாளரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தவிசாளரினாலேயே அனுமதி வழங்கப்பட்டது எனக் கூறப்படுவது அரசியல் நோக்கம் கொண்ட உண்மைக்குப் புறம்பான ஊடக தர்மத்திற்கும் அப்பாற்பட்ட முயற்சி என்பதையும் கேடிட்டுக்காட்ட விரும்புகின்றேன்.

உள்ளுராட்சி மன்றம் ஒன்று பிரஜை ஒருவர் வதிவிடத்திற்கான ஆவணங்களை சமர்ப்பித்து சட்ட ரீதியிலான தேவைப்பாடுகளை பூர்த்தி செய்த நிலையில் அனுமதிக்க முடியாது என கட்டிட அனுமதியை மறுக்க முடியாது. அது சட்ட மீறலும் மனித உரிமை மீறலுமாகும். அதேவேளை வதிவிடத்திற்கான அனுமதியைப் பெற்றவர் அதனை துஸ்பிரயோகம் செய்து வேறு ஒரு தேவைக்கு கட்டிடத்தினைப் பயன்படுத்துவாராக இருப்பின் அது சட்டரீதியில் தடுக்கப்பட்டுள்ளது. தேவாலயங்கள் அமைப்பதாயின் மத அலுவல்கள் அமைச்சின் பரிந்துரை கட்டிட அனுமதிக்கு அவசியமாகும் எனவும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *