போதைவஸ்து பாவனையை பள்ளிவாசல்களினால் அழிக்க முடியாது: அடக்க வேண்டியவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்களே…!samugammedia

பள்ளிவாசல் வெறும் தொழும்  இடமாக மாத்திரம் அல்லாமல் அனர்த்தங்களின் போதும் மக்கள் அல்லலுறும் சந்தர்பங்களிலும் அவர்களின் நலன்களில் கவனம் செலுத்தும் இடமாக செயற்பட்டது.  மாணவர்களுக்கு வழிகாட்டும் அமைப்பாக செயற்பட்டது. சமூக விரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு இடமாக செயற்பட்டது. மாவட்டம் தாண்டிய பள்ளிவாசல் சம்மேளனங்கள் எம்முடன் சேர்ந்து இயங்கவும் எதிர்காலத்தில் எம்மோடு சேர்ந்து பயணிக்கும் விருப்பத்தை ஏற்படுத்தும் முகாமாகவும் செயற்பட்டிருந்தது என அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய  பள்ளிவாசல் தலைவர் எஸ் எம் சபீஸ் தெரிவித்தார்.

பள்ளிவாசலில் பெருநாள் தொழுகைக்கு முன் அப்பள்ளிவாசல் தலைவரின் சம்பிரதாய உரை இடம்பெறுவது மரபாகும்.  அதனடிப்படையில் பள்ளிவாசல் தலைவரின் சம்பிரதாய உரையின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

ரமழான் மாதத்தை அடைய வைத்து அதனை முழுவதுமாக பூரணப்படுத்தி பெருநாள் தொழுகைக்கு நம் எல்லோரையும் ஒன்று சேர்த்த ரப்பில் ஆலமினுக்கு நன்றிகூரியவனாக.
சுமார்  10 வருடங்களின் பின் நிம்மதியான சூழலில் நோன்பு நோற்று ஈதுல் பித்ர் பெருநாளைக்கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறிக்கொள்கின்றேன். ரமழான் மாதம் அதிகமான மக்கள் பள்ளிவாசலில் நிறைந்திருந்தனர்.

அதிலும் குறிப்பாக வாலிபர்கள், சிறுவர்கள் அதிகம் இபாதத்துகளில் ஈடுபட்டிருந்தனர்.  திக்ருகளிலும், பயான்களிலும், தொழுகையிலும் அவர்கள் அதிக நேரங்களை செலவு செய்தனர். அவர்கள் எல்லோரும் மிகநீண்ட நேரம் நடுநிசியில் நின்று இறைவனை வணங்கியிருந்தார்கள் அதற்கு உலமாக்களே  சாட்சியாக இருகின்றனர். பள்ளிவாசலின் கோரிக்கையை ஏற்று இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சகோதரர்கள் தாய்மார்கள் அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கின்றேன்

எமக்கு முன் இருந்த நம்பிக்கையாளர் சபைத்  தலைவர்களால் தொடங்கிவைக்கப்பட்ட முன்னெடுக்கப்பட்ட பள்ளிவாசலின் கட்டுமானப்பணிகளை எங்களது காலத்தில் பூர்த்திசெய்திட  இறைவன்  எமக்கு அருள்புரிந்தான். இப்பணிகளுக்கு இரவுபகலாக பாடுபட்ட அனைத்து நம்பிகையாளர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கின்றேன். அதிலும் குறிப்பாக உமர் லெப்பை சேர் அவர்களுக்கு விசேட நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். கடந்த கொரானா காலங்களில்கூட கட்டுமானப்பணிகள் தொடர்ச்சியாக நடைபெற ஜமாஅத்தினரிடமிருந்து நிதி திரட்டிட உதவிய அபுசஹீத், ரோயல் அதம்லெப்பை மற்றும் மாப்பிள்ளை ஹாஜியார் போன்றோருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

இறைவன் எங்களுக்கு வழங்கிய அமானிதத்தை முறையாக பயன்படுத்தியுள்ளோம் எங்களால் மாத்திரமே அனைத்தும் செய்ய முடியும் எனும் அகங்காரத்தினை நாங்கள் முற்றாக  வெறுக்கின்றோம். அதனால்  பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைமையிலிருந்து விடைபெற நான் விரும்புகின்றேன்.   மீண்டுமொரு முறை தலைவர் பதவியினை ஏற்குமாறு  வேண்டிய உங்களது அன்புக்கோரிகையை என்னால் ஏற்றுகொள்ளமுடியாமைக்கு வருந்துகின்றேன்.

மேலும்,  ஒரே ஒரு கவலை என்னில் மீதமாகவுள்ளது. போதைவஸ்து பாவனையை முழுமையாக பள்ளிவாசல்களினால் அழிக்க முடியாது. நாங்கள் போதைவஸ்து பாவனை கொண்டவர் என அறியும் பட்சத்தில் அவர்களது  திருமணங்களை  எங்களால் முன்னின்று நடத்தாமல் தவிர்க்க முடியும். போதைவஸ்தில் மரணித்த ஒருதரின் ஜனாஸாவுக்கு எங்களது பள்ளிவாசல் உலமாக்களை அனுப்பாமல் தடை செய்தோம். ஆனால் போதைவஸ்தை முழுமையாக அடக்கவேண்டியவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்கள்தான். அது பள்ளிவாசல்களினால் முடியாது என்ற கவலையோடுதான் நாங்கள் செல்கின்றோம். எங்களுடைய நிருவாகக் காலத்தில் யாருக்கும் அநீதிகள்  ஏற்படாத வண்ணம் நடந்துள்ளோம். நாங்கள் செய்த நல்ல காரியங்களின், நன்மைகளை எமது ஜமாஅத்தினருக்கு பிரித்து  கொடுத்துவிடு இறைவா என்ற பிரார்த்தனையோடு தனது சம்பிரதாய உரையை  நிறைவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *