தமிழர் பகுதியில் நாளை முடங்கும் சேவைகள் எவை? முழுமையான அறிவிப்பு வெளியானது samugammedia

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராகவும், தமிழ் மக்களின் இன, மத, வாழிட அடையாளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராகவும் வடகிழக்கு மாகாணங்கள் தழுவிய மாபெரும் ஹர்த்தால்  நாளை 25 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. 

7 தமிழ் கட்சிகள் கூட்டாக விடுத்த இந்த ஹர்த்தால் அழைப்புக்கு வடகிழக்கு மாகாணங்களில் உள்ள பெருமளவு சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், மக்கள் அமைப்புக்கள், வியாபாரிகள், தொழிற்சங்கங்கள், தனியார் போக்குவரத்து துறையினர், பல்கலைகழக மாணவர்கள் என சகலரும் ஒத்துழைப்புக்களை வழங்கியிருக்கின்றனர். 

இந்த நிலையில் வடகிழக்கு மாகாணங்கள் முடக்கும் வகையில் நாளைய தினம் ஹர்த்தால் அனுட்டிக்கப்படவுள்ளது.

– வடக்கு, கிழக்கு முழுவதுமுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் நாளை மூடப்பட்டு ஆதரவளிக்கப்படும் என வர்த்தகர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

– நாளை போக்குவரத்து சேவைகளும் இடம்பெறாது என தனியார் போக்குவரத்து சங்கங்கள் அறிவித்துள்ளன.

– வடமாகாணம் முழுவதும் நாளை தனியார் பேருந்து சேவை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திலும் இதே நிலைமையே காணப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

– நாளை கல்விச்சேவைகளும் முடங்கும் என ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. வடக்கு கிழக்கு முழுவதும் நாளை பாடாசலை, தனியார் கல்வி நிலையங்களில் கற்பித்தல் செயற்பாடு முடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெற்றோர் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பி வீணாண அசசௌகரியங்களை சந்திக்காமலிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

– நாளை வடக்கில் சந்தை வியாபாரிகள் வர்த்தகத்தில் ஈடுபட மாட்டார்கள். இது தொடர்பில் அந்தந்த மாவட்ட சந்தை வியாபாரிகள் சங்கத்தினர் ஏற்கெனவே பகிரங்க அறிவித்தல் விடுத்துள்ளனர்.

கிழக்கில் பகிரங்க அறிவித்தல் ஏதுவும் விடுக்கப்படாவிட்டாலும், நாளை சந்தைகளை மூடுவதென அனைத்து பிரதான நகரங்களிலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

–  நாளை சலூன்களும் திறக்காது. வடமாகாண அழகக சங்கங்களின் சமாசத்தின் தலைவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், நாளைய போராட்டத்தை வெற்றியடைய செய்ய, அழகக சங்கங்கள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கிலுள்ள சலூன்களும் நாளை மூடப்பட்டிருக்கும்.

– நாளை நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதில்லையென பல சட்டத்தரணிகள் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

– பல்வேறு மத அமைப்புக்களும் போராட்டத்துக்கு ஆதரவளித்துள்ளன. திருகோணமலை தென்கயிலை ஆதீனத்தின் தவத்திரு அகத்தியர் அடிகளார், யாழ் மெய்கண்டார் ஆதீனத்தின் தவத்திரு உமாபதிசிவம் அடிகளார், இந்து சமய பேரவையின் தலைவர் ஈசான சிவசக்திகிரீவன் ஆகியோரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

– நாளைய போராட்டத்திற்கு கடற்றொழிலாளர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

– வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பில், நாளை வடமாகாண தனியார் ஊழியர்கள் பணிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவித்துள்ளது.

– நாளைய கதவடைப்புக்கு முஸ்லிம் தரப்பும் ஆதரவளித்துள்ளது. மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலுள்ள பல பள்ளிவாசல்கள், வர்த்த சமூகங்கள் போராட்டத்தை ஆதரித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *