நான் புலி தான்…!அமைச்சரின் கருத்தை ஏற்றுக்கொண்ட சாணக்கியன்-முற்றிய வாக்குவாதம்.!samugammedia

கடந்த 2010 ஆம் ஆண்டு ராஜபக்ச குடும்பத்துடன் இணைந்திருந்த சாணக்கியனை தேர்தல் காலத்தில் மக்கள் நிராகரித்திருந்தாகவும் அதன் பின்னர் இனவாதத்தை கையிலெடுத்து அரசியலை முன்னெடுப்பதாக வெளிவிவகார அமைச்சர் சபையில் இன்று குற்றம் சுமத்தியிருந்தார்.

நாடாளுமன்றில் இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்துப் பிரச்சினை குறித்து சாணக்கியன் கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதில் வழங்க தயார் இல்லை என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், நல்லிணக்க முயற்சிகள் குறித்து அமைச்சர்களான அலி சப்ரியும், அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் மக்கள் மத்தியில் தம்மை வீரர்களாக காட்டிக்கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.

மக்களின் பிரச்சனை தொடர்பாக கேள்வி எழுப்பும் போது தன்னை புலி என்று அமைச்சர் கூறியதாகவும் அவ்வாறு அவர் கூறுவதை ஏற்றுக்கொள்வதாக சாணக்கியன் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இந்த நாடாளுமன்றத்துக்குள் நல்லிணக்க விடயங்கள் உரிய வகையில் பின்பற்றப்படவில்லை என்று சாணக்கியன் குறிப்பிட்டார்.

தமது மாவட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசும் போது அது முக்கியத்துவம் அற்ற விடயம் என்று பிரதி சபாநாயகர் கூறுவதாகவும் சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.
இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் அலி சப்ரி, சாணக்கியன், இனவாத அடிப்படையில் செயற்படுவதாக குற்றம் சுமத்தினார்.

தாம் தனி இனம் ஒன்றுக்காக செயற்படவில்லை என்றும் முழு இலங்கையர்களின் நல்லிணக்கம் தொடர்பிலேயே செயற்படுவதாகவும் அலி சப்ரி கடும் தொனியில் தெரிவித்தார்.

அத்துடன் தென்னாபிரிக்காவிற்கு சுற்றுலா செல்லவில்லை என்றும் அங்கு 12 கூட்டங்களில் கலந்து கொண்டதாகவும் அனைத்து இலங்கையர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கே தாம் பாடுபடுவதாக குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *