முழுமுடக்க போராட்டம் வெற்றி: ஏழு கட்சிகள் கூட்டாக அறிக்கை! samugammedia

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நேற்று (25) முன்னெடுக்கப்பட்ட முழுமுடக்கப் போராட்டம் முழுமையான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. 

இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் இந்தப் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்த, தமிழ்த் தேசியப் பரப்பில் அரசியல் பணியாற்றிவரும் ஏழு கட்சிகளும் கூட்டாக தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளன. 

 இது தொடர்பில் குறித்த கட்சிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன, அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், 

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் கலாசாரம் பண்பாடு, மற்றும் அவர்களது புராதன சின்னங்களை அழித்தொழித்து அவ்விடங்களில் புத்தகோயில்களைக் கட்டி, பௌத்த சமய திணிப்பை ஏற்படுத்துவதற்கு எதிராகவும் இலங்கை அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராகவும் தமது எதிர்ப்பை முழுமையாகப் பதிவு செய்யவும் தமது கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்ளவும் வட-கிழக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இத்தகைய மிலேச்சத்தனமான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தக்கோரியும் வடக்கு-கிழக்கில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு நடத்திய பொதுமுடக்கமானது முழுமையாக வெற்றியடைந்துள்ளது. 

தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய ஏழு கட்சிகள் ஒன்றிணைந்து முழுமுடக்கத்திற்கான கோரிக்கையை முன்வைத்திருந்தனர். இதற்கு ஆதரவாக முஸ்லிம் கட்சிகளும் எம்முடன் கைகோர்த்திருந்தனர். 

மேலும், இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாக வட-கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்சங்கங்கள், பொது அமைப்புகள், போக்குவரத்து நிறுவனங்கள், வர்த்தக சங்கங்கள் போன்ற அனைவரும் ஒன்றிணைந்து இந்த பொதுமுடக்கம் வெற்றிபெற தமது முழுமையான ஒத்துழைப்பை நல்கினார்கள். புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற தமிழ் அமைப்புகளும் இலங்கையில் இருக்கின்ற மத நிறுவனங்களும் ஒன்றுபட்டு இந்தக் கண்டன நடவடிக்கைக்கு ஆதரவளித்திருந்தார்கள். 

இந்த முடக்கத்தைத் தடுப்பதற்கு அரசாங்கம் பல வழிகளிலும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இவை அனைத்தையும் நிராகரித்து கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்ட தமிழ் முஸ்லிம் மக்கள் அதற்குத் தனது உணர்வுபூர்வமான முழுமையான ஒத்துழைப்பை நல்கினார்கள். 

வட-கிழக்கை முழுமையாக ஸ்தம்பிதம் அடையச்செய்து மக்கள் தமது உணர்வை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். அரசாங்கம் தமிழ் மக்களின் நியாயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அரசாங்கத்தின் பல்வேறு திணைக்களங்களினூடாக புராதன சின்னங்களை அழிப்பது, அந்த இடங்களில் புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக புதிய புத்தகோயில்களைக் கட்டுவது, சைவக் கோயில்களை இடித்தழிப்பது போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் இனியாவது நிறுத்த வேண்டும்.

 இந்த பொது முடக்கத்திற்கு ஒத்துழைத்த அனைத்து மக்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறிக்கொள்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply