மட்டு பாடசாலையொன்றில் ஆசிரியரின் இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரி பெற்றோர்கள் போராட்டம்…!samugammedia

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட செம்மண்ணோடை அல்-ஹம்றா வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த ஆசிரியர் ஒருவரின் இடமாற்றத்தினை இரத்துச் செய்யக்கோரி இன்று(26) குறித்த பாடசாலைக்கு முன்பாக பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை பாடசாலைக்கு முன்பாக கூடியவர்கள் வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

மேற்படி பாடசாலையில் கடமையாற்றி வந்த 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வந்த ஆசிரியர் பிரிதொரு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.

குறித்த ஆசிரியர் கடந்த 4 மாதங்களாக கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இன்னும் பரீட்சைக்கு 6 மாத காலப் பகுதி இருந்தவேளை திடிர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனை தங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாதெனவும் அவரை மீண்டும் மேற்குறித்த பாடசாலைக்கு மீள நியமிக்கும்படி தெரிவித்தனர்.

அத்துடன் இடை நடுவில் இடமாற்றம் செய்வதனால் மாணவர்களது கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் குழப்பம் ஏற்பட்டு கல்வியில் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எங்களது பிள்ளைகளின் பரீட்சை பெறுபேறுகளில் பாதிப்பு ஏற்படக் கூடிய சூழ் நிலை காணப்படுவதாகவும் கவலை தெரிவித்தனர்.

5 ஆம் தர மாணவர்கள் இன்று பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை.கோரிக்கை அடங்கிய மகஜரை பிரதி அதிபர் எம்.எச்.எம்.ஹக்கீமிடம் கையளித்தனர்.

மகஜரை பெற்றுக்கொண்ட பிரதி அதிபர் மேலதிக நடவடிக்கைக்காக வலயக் கல்விப் பணிப்பாளரின் கவனத்திற்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.

அதன் பிரதிகள் சுற்றாடல் துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்,கிழக்கு மாகாண ஆளுநர்,மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளர் ஆகியோர்களுக்கு நடவடிக்கைக்காக வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply