எரிகின்ற வீட்டில் கொள்ளி பிடுங்கும் இனம் தமிழினம் அல்ல- சபையில் கர்ஜித்தார் சிறீதரன்…!samugammedia

எரிகின்ற வீட்டில் கொள்ளி பிடுங்கும் இனம் தமிழினம் அல்ல எனவும் வீடு எரிகின்றபோது கொள்ளி பிடுங்கி அதில் இலாபம் தேடுபவர்களும் தமிழர்கள் இல்லை என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்திருந்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டுவரை சகோதர இனமான தமிழினத்தை சிங்கள தேசம் பாரிய இனப்படுகொலை செய்திருந்த போதும் சர்வதேச நாணய நிதியம் இன்று இலங்கையை பொருளாதார ரீதியில் பாதுகாப்பதற்கு முன்வந்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய நிபந்தனைகளில் இலங்கையிலுள்ள இனப்பிரச்சனை தொடர்பில் அவர்களால் என்ன நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டது என்றும் சி.சிறீதரன் சபையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

மீண்டும் ஒரு யுத்தத்திற்கு சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதி வழங்குகின்றதா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

கடந்த காலங்களிலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா, கியூபா மற்றும் இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் இலங்கை யுத்தம் நடத்துவதற்கு பாரிய நிதிகளை வழங்கியிருந்தாகவும்
யார் மீது இந்த யுத்தம் இடம்பெற்றது என்றால் சகோதர இனமான தமிழினத்தின் மீது இந்த நாட்டின் குடி மக்கள் மீது யுத்தம் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான சந்தர்பங்களில் கண்மூடியிருந்த  சர்வதேச நாணய நிதியம் இன்று இலங்கையின் பொருளாதாரத்தை மீட்கப்போவதாக குறிப்பிடுவதாகவும் சிறீதரன் குறிப்பிட்டார்

இதேவேளை இந்த நாட்டில் அரசியல் பிரச்சனை இல்லை என்றும் மாறாக பொருளாதார பிரச்சனை மட்டுமே உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பதாகவும் அவருக்கு பொருளாதார ரீதியிலான அறிவு உள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

Leave a Reply