புத்தளம் கற்பிட்டி பகுதியில் பஸ்ஸுடன் கெப் வண்டி நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கற்பிட்டியிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பஸ்ஸுடன் பாலாவியிலிருந்து கற்பிட்டி சென்ற கெப் வண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து பாலாவி – கற்பிட்டி சம்மட்டிவாடி பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது கெப் வண்டியில் பயணித்த இருவரும் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கெப் வண்டியின் சாரதி புத்தளம் ஆதார வைத்தியசாலையிலிருந்து சிலாபம் வைத்தியசாலைக்கு சென்ற வேளை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் சிலாபம் வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளது.
மற்றுமொருவர் குருனாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவ்வாறு குருனாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ்ஸின் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பஸ்ஸில் சென்ற பயணிகளுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த கெப் வண்டியின் சாரதி 32 வயதுடைய கற்பிட்டி மண்டலக்குடா பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.
கெப் வண்டியின் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையின் காரணத்தினாலே விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் சம்வம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.