முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் ஐயர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் முல்லைத்தீவு சிலாவத்தையில் மரண கிரியைகள் செய்யும் அப்புத்துரை வேலாயுதம் (டிஸ்கோ ஐயர்) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது
பொலிஸார் விசாரணை
இந்தச் சம்பவம், இன்று (28) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வீட்டில் ஐய்யர், மனைவி மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்த உறவினர் என மூவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளை, கொள்ளையர்கள், வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து, ஐய்யரின் மனைவியையும் வயதான உறவினரையும் கை, கால்களை கட்டி, வாயும் கட்டி வைத்துவிட்டு, ஐய்யர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வீட்டுக்குள் நுளைந்த இரு சந்தேகநபர்களும் முகத்துக்கு துண்டுகளை கட்டி, கையில் வாள், பொல்லுகள் கொண்டுவந்ததாக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வயோதிபர் தெரிவித்தார். கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகை என்பவற்றை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்கள்.
இந்நிலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட மனைவி மற்றும் உறவினர் பெரும் போராட்டத்துக்கு மத்தியில் அவற்றை அவிழ்த்து, வெளியே சென்று பார்த்தபோது, ஐயர் உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.
மக்கள் அச்சம்
அச்சமடைந்த அவர்கள் , வீட்டிற்கு முன்னால் உள்ள கடைக்காரருக்கு தகவல் தெரிவித்த நிலையில் கடைக்கார , பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் , தடையவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் துப்பறியப்பட்டுள்ளன.
அத்துடன் சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியும் நேரில் வந்து பார்வையிட்டுள்ளனார்.
அத்துடன், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா பார்வையிட்டு விசாரணைகள் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் குறித்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம், முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தவாரம் யாழ் நெடுந்தீவில் ஐவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் முல்லைத்தீவில் ஐயர் கொல்லப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை அண்மைக்காலமாக தமிழர் பிரதேசங்களில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post தமிழர் பகுதியில் மீண்டும் ஓர் அதிர்ச்சிகர சம்பவம்! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.