எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் இலங்கையின் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நஷ்ட ஈடு உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய விரிவான அறிக்கை இதுவரை தயாரிக்கப்படவில்லை என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையை எவ்வாறு தயாரிப்பது என்பது தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக சட்ட மா அதிபருடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் கோரியுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அசேல பி.ரெக்கவ குறிப்பிட்டுள்ளார்.
அந்த கலந்துரையாடலின் அடிப்படையில் அறிக்கையை தயாரிக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்ட மா அதிபர் திணைக்களம் கோரியுள்ள அறிக்கை தொடர்பில் தெளிவற்ற நிலை காணப்படுவதன் காரணமாக இந்த கலந்துரையாடலுக்கு சந்தர்ப்பம் கோரியதாகவும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தினால் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு நஷ்ட ஈடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அறவிடுவதற்கு எதிர்பார்க்கப்படும் நஷ்ட ஈடு தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிப்பதற்காக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது.