விபுலானந்தரின் வரலாறுகள் இளந்தலைமுறையினருக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும்..!samugammedia

தமிழ் உலகின் பொக்கிசமாக கருதப்படுபவர் சுவாமி விபுலானந்தர்.அவரின் வரலாறுகள் இளந்தலைமுறையினருக்கு கொண்டுசெல்லப்படவேண்டும் என சுவாமி விபுலானந்தா நூற்றாண்டு விழாச்சபையின் பொருளாளரும் முன்னாள் வலய உதவி கல்விபணிப்பாளர் உ.யுவராஜன் தெரிவித்தார்.

உலகின் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையினையும் முத்தமிழ் வித்தகர் என்ற பெருமையினையும் கொண்ட சுவாமி விபுலானந்தரின் 131வது ஜனனதினம் இன்று(03) மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் சுவாமி விபுலானந்தா நூற்றாண்டு விழாச்சபையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு மட்டக்களப்பு நகரில் உள்ள நீரூற்றுப்பூங்காவில் உள்ள சுவாமி விபுலானந்தர் சிலையருகில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுவாமி விபுலானந்தா நூற்றாண்டு விழாச்சபையின் பொருளாளரும் முன்னாள் வலய உதவி கல்விபணிப்பாளர் உ.யுவராஜன்,மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதிஆணையாளர் யு.சிவராஜா உட்பட மாநகரசபை உத்தியோகத்தர்கள்,மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது சுவாமி விபுலானந்தரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து சுவாமி விபுலானந்தரினால் இயற்றப்பட்ட வெள்ளை நிற மல்லிகையோ என்ற பாடல் மட்டக்களப்பு புனித வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலை மாணவர்களினால் பாடப்பட்டது.

இதன்போது சுவாமி விபுலானந்தர் தொடர்பான சிறப்புரைகளும் நடைபெற்றதுடன் இறுதியாக மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதிஆணையாளர் யு.சிவராஜாவின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.


Leave a Reply