புயல் தொடர்பில் வடக்கு கிழக்கு மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

வங்காள விரிகுடாவில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலை சில வேளைகளில் புயலாகவும் மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், இதன் காரணமாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு பாதிப்பு இல்லை என்று யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை மூத்த விரிவுரையாளர் நா. பிரதீராஜா தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

வங்காள விரிகுடாவில் இலங்கை தென் கிழக்கே புதிய காற்றழுத்த தாழ்வுநிலை இன்று உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை யாழிற்கு கிழக்காக வங்காள விரிகுடாவில் காற்றுச் சுழற்சி ஒன்றும் காணப்படுகிறது.

இது வடகிழக்குத் திசை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக சிலவேளைகளில் புயலாகவும் மாற்றம் பெறலாம். அவ்வாறு புயலாக மாற்றம் பெற்றால் ‘மொச்சா’ என்று பெயர் சூட்டப்படும்.

நாளை மறுதினம் (07-05-2023) செவ்வாய்க்கிழமை இரவு அல்லது 10ஆம் திகதி மியான்மருக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதன் தோற்றமும் நகர்வுப் பாதையும் மத்திய வங்காள விரிகுடாவில் இருப்பதானால் இலங்கைக்கு குறிப்பாக வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு நேரடியாக எத்தகைய பாதிப்பும் ஏற்படாது.

இருப்பினும், இன்று முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரையும் அவ்வப்பொழுது மழை கிடைக்கும்.

அதேநேரம் இன்று தொடக்கம் எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் வடக்கு – கிழக்கு கடற்பிராந்தியம் கொந்தளிப்பாக காணப்படுவதால் மீனவர்கள் தொழிலுக்கு செல்வதில் அவதானம் தேவை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

The post புயல் தொடர்பில் வடக்கு கிழக்கு மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply