வடக்கு, கிழக்கில் நில ஆக்கிரமிப்பை உடனடியாகத் தடுத்து நிறுத்துங்கள்…! ஜனாதிபதியிடம் தமிழ் எம்.பிக்கள் நேரில் இடித்துரைப்பு…!samugammedia

“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நில ஆக்கிரமிப்பை உடனடியாகத் தடுத்து நிறுத்துங்கள். அரசாலும் அதன் படைகளாலும் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை உடனடியாக விடுக்க நடவடிக்கை எடுங்கள்.” என வடக்கு – கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரில் கோரிக்கை விடுத்தனர்

ஜனாதிபதிக்கும், வடக்கு – கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போதே  வடக்கு – கிழக்கு எம்.பிக்கள் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்தச் சந்திப்பில் காணிப் பிரச்சினை, தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டம், புதிதாகக் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகள் விவகாரம்,  குருந்தூர்மலை விவகாரம் மற்றும் வெடுக்குநாறிமலை விவகாரம் என வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட்டன.
 
சந்திப்பில் அரசு தரப்பில் ஜனாதிபதியுடன் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் ஆகியோருடன் திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

வடக்கு – கிழக்கு தமிழ் எம்.பிக்கள் சார்பில் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவஞானம் சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், தவராசா கலையரசன், எஸ்.வினோநோகராதலிங்கம், சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் பங்குபற்றினர்.

Leave a Reply