ஒற்றுமைக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் இலங்கை ஆதரவளிக்காது- ஜனாதிபதி! samugammedia

ஆசியாவின் முதலாவது மாநாட்டு மண்டபமான பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் நிர்மாணிக்கப்பட்ட 50 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

ஆசியாவின் ஒற்றுமைக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் இலங்கை ஆதரவளிக்காது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

ஆசியாவின் முதலாவது மாநாட்டு மண்டபமான பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் நிர்மாணிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நேற்று (10) ஒழுங்குசெய்யப்பட்டிருந்த வைபவத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆசிய பூகோள அரசியலுக்கும் பசுபிக் பிராந்திய அரசியலுக்கும் இடையில் பல வேறுபாடுகள் காணப்படுவதாகவும், அந்த வேறுபாடுகளை நாம் உணர்ந்து சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதற்கு செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அடுத்த இரண்டு தசாப்தங்களில் வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இலங்கையை முன்னேற்றுவதற்கு அணிசேரா கொள்கை, பஞ்சசீலம் மற்றும் ஆசியக் கொள்கைகளைப் பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் வரலாறு குறித்து எழுதப்பட்ட நூல் ஒன்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 25 ரூபா பெறுமதியான நினைவு முத்திரையொன்றும் வெளியிடப்பட்டது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க:

அணிசேரா கொள்கை, பஞ்சசீலம், ஆசியக் கொள்கை ஆகியவற்றைப் பயன்படுத்தி இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். அந்த பொதுவான விடயம் இன்றும் செல்லுபடியாகும். இந்த பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் ஆசியாவின் ஒருமைப்பாடு தொடர்பில் சுட்டிக்காட்டக்கூடிய சிறந்த உதாரணம் என்றே கூற வேண்டும்.

இதனை நாம் அன்பளிப்பாக பெற்றோம். ஆசியாவின் ஒற்றுமையை நாம் தொடர்ந்து பேண வேண்டும். உலக வல்லரசுப் போட்டியில் இந்து சமுத்திர நாடுகளிடையே மட்டுமே ஒற்றுமையை குழப்ப முடியவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உலக வல்லரசுகளாக மாற வேண்டும் என்ற இலட்சியத்துடன் சில குழுக்கள் பசுபிக் சமுத்திர நாடுகளுக்கிடையேயான ஒற்றுமையை குலைத்து அவற்றுக்கிடையில் மோதல் நிலைமையை ஏற்படுத்தியுள்ளன. அந்த நிலைமை இந்து சமுத்திரத்திற்குள் ஏற்படுவதைத் தடுக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஆசியாவின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு இலங்கை எந்த வகையிலும் துணைபோகாது என்பதையும் வலியுறுத்துகிறேன்.

ஆபிரிக்க பிராந்தியத்திலும் ஏனைய நாடுகளிலும் இலங்கை இராணுவம் பணியாற்றி வருகின்றது. அந்த நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், கடற்கொள்ளையர்களிடம் இருந்து அந்நாடுகளை பாதுகாக்கவும் நமது இராணுவம் விரிவான பங்களிப்பை அளித்து வருகிறது என்றார்.

50 வருடங்களில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு விழாக்கள் மற்றும் கண்காட்சி என்பவற்றின் ஊடாக அதிக வருமானம் ஈட்டிக் கொடுத்த நிறுவனங்களுக்கு இதன் போது நினைவுப் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன. கண்காட்சிப் பிரிவில் புத்தக வெளியீட்டாளர் சங்கத்திற்கும் விழாப் பிரிவில் பிரிடிஷ் கவுன்சிலுக்கும் ஜனாதிபதியின் கரங்களினால் நினைவுப் பரிசில் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *