தையிட்டி விகாரையைத் தடுக்க தவறிய சுமந்திரன்…! பின்னணி என்ன? – கே.வி.தவராசா கேள்வி..!samugammedia

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் காணி விவகாரங்களைக் கையாளும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட தையிட்டிப் பிரதேசத்தில் இடம்பெற்ற பௌத்த மயமாக்கலுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கத் தவறினார் என தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை கேள்வியெழுப்பியுள்ளது.

இணைய ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலின்போதே, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

‘தையிட்டிப் பிரதேசம் முற்றுமுழுதாக தமிழரசுக் கட்சியின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருந்தது. இன்று நேற்றல்ல 2018ம் ஆண்டு அங்கே விகாரை கட்டுவதற்கு ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அடிக்கல்லை நாட்டியது யார்? அப்போது வடக்கு மாகாண ஆளுநராக இருந்த ரெஜினோல்ட் கூரே அடிக்கல் நாட்டினார்.

2018ம் ஆண்டு விகாரை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்று 100 அடியைத் தாண்டிவிட்டது.நாங்கள் ஒரு விடயத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்றால் ஆரம்பத்திலேயே தெரிவிக்க வேண்டும். விகாரை கட்டி முடிக்கப்படும் தறுவாயில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. 5 வருடங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? 5 வருடங்களாக ஏன் நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை?

இது வலி.வடக்கு தவிசாளரது ஒரு கடமை. இந்த விடயத்திலும் முன்னாள் தவிசாளர் மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. சில விடயங்களை வெளிப்படையாகக் கூற முடியாது ஆனால் இந்த காணி விவகாரங்களைக் கையாளுபவர் எம்.ஏ.சுமந்திரன். அப்படி இருக்கும்போது நல்லாட்சி காலத்திலும் இது நடைபெற்ற விடயம் தடுத்திருக்கலாம்.

ஆயிரம் விகாரைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்தமைக்கு என்ன காரணம் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.எமது உரிமைப் போராட்டத்தின் அடிப்படை அம்சம் நிலத்திற்கானதும், மொழிக்கானதுமாகவே இருக்கின்றது.

ஆயிரம் விகாரை அமைப்பதற்கான திட்டம் இன்று நேற்று வந்தது அல்ல. இந்த ஆட்சி வந்த பின்னர் வந்த விடயமும் அல்ல. நல்லாட்சி காலத்திலேயே ஆயிரம் விகாரைகளை அமைப்பதற்கும் யுத்தம் முடிவடைந்த பின்னர் இராணுவத்திற்கு நிதியை அதிகரிப்பதற்குமான விடயம் உள்வாங்கப்பட்டது. அப்பொழுது எங்களுடைய தலைமைத்துவங்களோ நாடாளுமன்ற உறுப்பினர்களோ எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அந்த பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது. அப்படி நிறைவேற்றத் திட்டமிட்டபோது, அமைச்சராக இருந்தவர் சஜித் பிரேமதாஸ.

அந்த திட்டத்தின் பிரகாரம் வடக்கு கிழக்கில் விசேடமாக வடக்கில் அந்த விடயங்களை முன்னெடுக்கின்றனர்.

நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்தபோது கூட அங்கே சென்று விகாரை கட்டிமுடிக்கின்றனர்.நீதித்துறையின் செயற்பாடுகள் கூட அங்கு மீறப்படுகின்றன. எவர் ஆட்சிக்கு வந்தாலும் பௌத்தம், மொழி, இறைமை இவ்விடயங்களில் அவர்கள் ஒற்றுமையானவர்களாக இருக்கின்றனர்.

தமிழரசுக் கட்சிக்குள்ளே எத்தனை பேர் தமிழ்த் தேசியவாதிகள் என்பதே இப்போது கேள்விக்குறியாகவுள்ளது. தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியம் சாராதவர்களையும் கட்சிக்குள் உள்ளடக்கியிருக்கின்றது.

தமிழரசுக் கட்சியின் கொள்கை என்னவென்றால் தமிழ்த் தேசியம்.ஆனால் கட்சியில் உள்ள ஒரு சில அங்கத்தவர்கள் தமிழ்த் தேசியத்தைக் கைவிட்டுள்ளனர்.தற்போது தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பாக போட்டியிட்டு இருந்தமையால் இப்போதுள்ள எம்.பிக்கள் கூட்டமைப்பு என பார்க்கப்பட்டாலும், உள்ளூராட்சிமன்றத் தேர்தல் அறிவிப்பின் போது கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக் கட்சி வெளியேறிவிட்டது.

ஒரு கட்சி கூட்டமைப்பாக முடியாது. தமிழரசுக் கட்சி பிரிந்து சென்றுவிட்டபின் இப்போது கூட்டமைப்பு என்பது ஏனைய இரு கட்சிகளும்தான்.தமிழரசுக்கட்சியில் தலைமைத்துவத்தை எப்படியென்றாலும் அடைந்து விட வேண்டும் என ஒருசிலர் முயற்சி எடுப்பதனால்தான் கட்சி இன்று பின்னடைவைச் சந்தித்துள்ளது.

கட்சிக்குள் நடக்கும் விடயங்கள் தொடர்பில் மௌனம் காப்பவர்கள் பலருக்கு பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.உள்ளூராட்சி சபையில் மேயர், மாகாண சபை உறுப்பினர் வேட்பாளர், முதலமைச்சர் என பல்வேறு வேட்பாளர்களுக்கான வாக்குறுதிகளும் மௌனம் காப்போருக்குவழங்கப்பட்டுள்ளன. இப்போது தலைமைத்துவப் போட்டியில் உள்ளவர்கள் தலைமைக்கு வந்தால் தமிழரசுக் கட்சி தமிழ் அழிவுக் கட்சியாக மாற்றமடைந்துவிடும்’ என்றார்.

Leave a Reply