ஊர்திப் பவனி, கஞ்சி வழங்கல், விளக்கேற்றல் எதற்கு? – சரத் வீரசேகர கேள்வி! samugammedia

“போரில் இறந்த உறவுகளை வீட்டுக்குள் நினைவுகூரலாம். ஊர்திப்பவனி, கஞ்சி வழங்கல், விளக்கேற்றல் எதுவும் தேவையில்லை. அத்துடன் வடக்கு – கிழக்கில் உறவுகள் என்ற போர்வையில் புலிப் பயங்கரவாதிகளை ஆண்டுதோறும் ஒரு தரப்பினர் பகிரங்கமாக நினைவேந்தி வருகின்றனர். இதை உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும்” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் வடக்கு – கிழக்கில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே மேற்கண்டவாறு அவர் பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:–

“அரசு நினைவேந்தல்களுக்கு அனுமதி வழங்குவதால் புலிப் பயங்கரவாதிகளையும் தமிழ்த் தரப்பினர் நினைவேந்தி வருகின்றனர். அத்தகைய நிகழ்வுகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

போரில் இறந்த உறவுகளைத் தமிழ் மக்கள் நினைவேந்த வேண்டுமெனில் அவர்கள் தங்களது வீடுகளுக்குள் அதனைச் செய்ய முடியும். அதைவிடுத்து ஊர்திப் பேரணிகள் மூலமும் கஞ்சிகள் வழங்கியும் பொது இடங்களில் விளக்கேற்றியும் வழிபடவேண்டிய அவசியமில்லை. 

எதிர்காலத்தில் இப்படியான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” – என்றார்.

Leave a Reply