முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி! samugammedia

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப்போரில்  முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றழிக்கப்பட்டதன்  நினைவாக அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில்  நாளையதினம்(18)  14 ஆவது ஆண்டு தமிழ்  இனப்படுகொலை நினைவேந்தல் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளது.

நாளை காலை 10 .30  மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட ஒருவர்   பொதுச்சுடர் ஏற்றவுள்ளதோடு  ஏனைய  உறவுகளுக்கான சுடர்கள்  ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு இனப்படுகொலைக்கு நீதிகோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்துள்ள  ஊர்தி பவனியும் இன்றையதினம் (17) இறுதிப்போர் இடம்பெற்ற புதுமாத்தளன் ,ஆனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அஞ்சலி செலுத்தி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பயணத்தை தொடர்ந்தது.

எனவே அனைத்து மக்களையும் இந்த தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலில் கலந்துகொள்ளுமாறும் தத் தமது வீடுகளில் சுடர் ஏற்றி அஞ்சலிக்குமாறும் ஒருவேளை உணவாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை வீடுகளில் பரிமாறுமாறும்  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொது கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.


நாளைய நினைவேந்தல் ஏற்பாடுகளோடு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் மற்றும் ஆத்மா சாந்தி நிகழ்வுகளும் முள்ளிவாய்க்கால் பகுதியில்  இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *