திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறுவதற்கு தடை உத்தரவு- மறுக்கப்படும் தமிழ் மக்களின் உரிமைகள்! samugammedia

2009 மே மாதம் 18ஆம் திகதி தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் வைத்து படுகொலை செய்யப்பட்ட நாளை நினைவு கூறும் முகமாக ஒவ்வொரு வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி வடக்கு கிழக்கு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், பல அமைப்புகளால் பரிமாறப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இம்முறை திருக்கோணமலை மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி பரிமாறுவதற்கு திருக்கோணமலை துறைமுக காவல்துறையினர் மற்றும் திருக்கோணமலை பிரதான காவல்துறையினர் தடை உத்தரவை பெற்றிருந்தனர்.

இதற்கு அண்மையில் திருக்கோணமலை புனித மரியாள் கல்லூரிக்கு அருகில் புத்தர் சிலை ஒன்று வைக்க முற்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய பேரவையால் மேற்கொள்ளப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தை காரணம் காட்டி, இனமுருகல் ஏற்படும் என்பதை முன்னிறுத்தி, இந்த தடை உத்தரவை காவல் துறையினர் பெற்றிருந்தனர்.

எனினும் இது தமிழ் மக்களின் உரிமை என்பதை முன்னிறுத்தி, இன்றைய தினம் பல அமைப்புகளைச் சேர்ந்த இளையோர் ஒன்று கூடி திருக்கோணமலையின் ஆனந்தபுரி வைரவர் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி தயாரிக்கப்பட்டு, மக்களுக்கு பரிமாறப்பட்டது.

இதன் போது பல இளம் தலைமுறையினர் பங்கு கொண்டதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வீதியில் சென்றவர்களுடன் பரிமாறி தங்களுடைய நினைவையும், அடுத்த சந்ததிக்கு பரிமாறிக்கொண்டனர்.

இவ்வாறு நியாயபூர்வமான நினைவுகளை செய்வதற்கு கூட தமிழ் மக்களுக்கு உரிமை மறுக்கப்படுவது கண்டிக்கத்தக்க விடயம் என்பதை இளையோர் குறிப்பிடுகின்றனர். 

Leave a Reply