இலங்கைத் தமிழர் இனப்படுகொலை..! கனடா பிரதமர் விடுத்த அறிக்கை- இலங்கை கண்டனம்..!samugammedia

தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் தினத்தை அங்கீகரிக்கும் விதத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ  தெரிவித்துள்ள கருத்துக்களை தொடர்ந்து இலங்கைக்கும் கனடாவிற்கும் இடையில் இராஜதந்திரமோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கனடா பிரதமர் விடுத்துள்ள அறிக்கையை இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கண்டித்துள்ளார்.

இன்று நாங்கள் 14 வருடங்களிற்கு பின்னர் துன்பகரமான விதத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை நினைகூறுகின்றோம் என தெரிவித்துள்ள கனடா பிரதமர் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலையில் ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்கள் இழக்கப்பட்டன,பலர் காணாமல்போனார்கள் காயமடைந்தார்கள் இடம்பெயர்ந்தார்கள் என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்டவர்கள், உயிர்பிழைத்தவர்கள் மற்றும் அர்த்தமற்ற வன்முறையால் ஏற்பட்ட துயரத்துடன் தொடர்ந்தும் வாழும் அவர்களின் குடும்பத்தவர்கள் குறித்து எங்கள் சிந்தனைகள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் பல சமூகங்களில் நான் சந்தித்த பலர் தமிழ் கனடா பிரஜைகளின் கதைகள் மனித உரிமைகள் சமாதானம் ஜனநாயகம் போன்றவற்றை இலகுவாக கருதமுடியாது என்பதை நினைவுபடுத்தி நிற்கின்றன எனவும் கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாகவே கடந்த வருடம் மே18ம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக நாங்கள் அங்கீகரித்தோம் என தெரிவித்துள்ள கனடா பிரதமர், மோதலால் கொல்லப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் உரிமைக்காகவும்  இலங்கையில் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளவர்களிற்காக  குரல் கொடுப்பதை கனடா நிறுத்தாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த அறிக்கையை கண்டித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர்  இது இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகளிற்கு உதவியாக அமையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *