மோசடிகாரர்களிடம் ஏமாற வேண்டாம் – நாட்டு மக்களுக்கு வெளியான எச்சரிக்கை..! samugammedia

வெளிநாட்டு கடவுச்சீட்டு மோசடிகளை தடுக்க உரிய நடவடிக்கைகள் திணைக்கள மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் மாதம் முதல் நாடளாவிய ரீதியில் உள்ள 50 பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

ஆகவே, கடவுச்சீட்டுக்காக இடைத்தரகர்கள், மோசடியாளர்களிடம் ஏமாற வேண்டாம் என குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிடிய பொது மக்களிடம் வலியுறுத்தினார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது, நாட்டில் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்த பின்னணியில் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கான கேள்வி அதிகமாக காணப்பட்டது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் மனித மற்றும் பௌதீக வளங்களை கருத்திற்கொண்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்கு நேரம் மற்றும் காலத்தை ஒதுக்கிக்கொள்ள இணையவழி முறைமை ஊடான வழிமுறை கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகத்துக்கான இணையவழி முறைமை ஊடான விண்ணப்பம் சமர்ப்பிப்பு கடந்த 17ஆம் திகதியுடன் இரத்து செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள திணைக்களத்துக்கு வருகை தரும் பொது மக்களின் விண்ணப்பங்கள் டோக்கன் முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், வழமையான தன்மை பின்பற்றப்பட்டது.

வரிசையில் நிற்காமல் கடவுச்சீட்டுக்களை பெற்றுத் தருவதாக குறிப்பிட்டு ஒரு தரப்பினர் நிதி மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த முறைகேடான செயற்பாட்டுடன் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தொடர்புகொண்டுள்ளதாக அறிய முடிந்தது. அவருக்கு எதிராக திணைக்கள மட்டத்தில் விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வரிசையில் இருக்காமல் கடவுச்சீட்டு பெற்றுத் தருவதாக குறிப்பிட்டு நிதி மோசடி செய்த 16 பேர் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் வளாகத்தில் இருந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

பொதுமக்கள் இலகுவான முறையில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் வகையிலான வசதிகள் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் விரிவுபடுத்தப்படும்.

இதற்கமைய முதற்கட்டமாக 50 பிரதேச செயலகங்களில் அதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் நபர் இணைய வழி முறைமை ஊடாக கடவுச்சீட்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதனை குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்துக்கு சமர்ப்பித்துவிட்டு புகைப்படம், கைரேகை பதிவுகளை பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக சமர்ப்பிக்க வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

இதற்காக பிரதேச செயகல பிரிவுகளில் விசேட கருமபீடங்கள் அமைக்கப்படும். முழுமையாக விண்ணப்பங்களை சமர்ப்பித்ததன் பின்னர் மூன்று நாட்களுக்குள் பதிவுத் தபால் ஊடாக வீட்டுக்கே கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்படும்.

சாதாரண சேவை உட்பட ஒருநாள் சேவை ஆகியவற்றை இவ்வாறு தொடர தீர்மானித்துள்ளோம். இதன் பின்னர் எவரும் பத்தரமுல்ல தலைமை காரியாலயத்துக்கு வருகை தரவேண்டிய அவசியம் இருக்காது.

இந்த ஆண்டுக்குள் இலத்திரனியல் கடவுச்சீட்டு முறைமையை அறிமுகப்படுத்த அமைச்சரவை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச மனித வளம் மற்றும் பௌதீக வளங்களை கொண்டு திணைக்களம் செயற்படுகிறது.

ஒரு நாள் கடவுச்சீட்டுக்கான கேள்வி அதிகமாக காணப்படுகின்றது. கடந்த 18ஆம் திகதி 1995 கடவுச்சீட்டுக்களும், 19ஆம் திகதி 1750 கடவுச்சீட்டுக்களும், இன்று 1500 கடவுச்சீட்டுக்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. 

இலகுவான முறையில் கடவுச்சீட்டுக்களை பெற்றுத் தருவதாக குறிப்பிட்டுக்கொண்டு ஒரு தரப்பினர் பொது மக்களை ஏமாற்றுகிறார்கள்.

அவர்கள் அதை தொழிலாக செய்கிறார்கள். ஆகவே, கடவுச்சீட்டுகளுக்காக இடைத்தரகர்கள், மோசடியாளர்களிடம் ஏமாற்றமடைவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *