ஆளுந் தரப்பு எம்பிக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு..!samugammedia

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணைக்கு ஆதரவாக மக்கள் சக்தியின் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல அரசியல் கட்சிகள் வாக்களிக்கத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போதும் கூட, அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்களுடன் கலந்தாலோசித்து பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்ததாக அரசியல் வட்டாரங்கள் மேலும் கூறுகிறது.

இதேவேளை, ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் நாளைய தினம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு ஆளும் கட்சி அமைப்பாளர் அலுவலகத்தினால் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான விசேட அறிவித்தல் வழங்கப்பட்டுள்ள நிலையில், குறித்த காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு செல்வதற்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்த இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் மற்றும் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் பலர் ஏற்கனவே நாட்டுக்கு வந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து தலைவர் ஜானக ரத்நாயக்க நீக்கப்பட்டமை தொடர்பில் நாளை 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ளதுடன், அது தொடர்பான வாக்கெடுப்பு அன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து கொண்டு பொது மக்களுக்கு விரோதமாக நடந்து கொண்டதால் அவரை நீக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு முன், அவருக்கு எதிராக விசாரிக்கப்பட்ட இரண்டு வழக்குகளில் அவரது நடத்தை பொதுமக்களுக்கு எதிரானது என்பதை நீதிமன்றம் உறுதி செய்தது.

இதேவேளை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்தும் அதன் தலைவர் பதவியிலிருந்தும் ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *