வங்கி வட்டி வீதங்களைக் குறைக்க நடவடிக்கை: மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியானது! samugammedia

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுமாயின் எதிர்வரும் 6 மாதங்களுக்குள் வங்கி வட்டி வீதங்களைக் குறைக்க முடியும் என்று ஜனாதிபதி அலுவலகப் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கிருலப்பனையில் இடம்பெற்ற ஐ.தே.க. தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது சாகல ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில், 

 இலங்கை மீது நாணய நிதியத்துக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவாகும். அவரது சர்வதேச தொடர்புகள் மாத்திரமின்றி , சரியான தீர்மானங்களை அச்சமின்றி நடைமுறைப்படுத்தியமையும் இதில் செல்வாக்கு செலுத்தும் பிரதான காரணியாகும்.

சில சந்தர்ப்பங்களில் இவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்ட தீர்மானங்கள் மக்களுக்கு பொறுத்தமானவையாகக் காணப்படவில்லை. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காகவே ஜனாதிபதி அவ்வாறான தீர்மானங்களை எடுத்தார். எவ்வாறிருப்பினும் தற்போது அந்த நெருக்கடிகள் படிப்படியாகக் குறைவடைந்து வருகின்றன.

ரூபாவின் பெறுமதி உயர்வடையும் போது பொருட்களின் விலைகள் மேலும் குறைவடையும். வர்த்தகம் , சுற்றுலாத்துறை என்பவற்றை மேம்படுத்துவதன் ஊடாகவும் , இந்தியாவைப் போன்று டிஜிட்டல் மயமாக்கல் ஊடாகவும் எம்மால் அந்த இலக்கை துரிதமாக அடைய முடியும்.

ஊழல் , மோசடிகள் இன்றி நேரடியாக மக்களுக்கு அரச சேவைகளை வழங்க முடியும். அதற்கான திட்டமிடல்கள் எம்மிடமுள்ளன. அதற்கமைய எதிர்வரும் 6 மாதங்களுக்குள் வங்கி வட்டி வீதங்களையும் குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply