சுருக்குவலையில் கடற்தொழிற் திணைக்களத்தின் அளவுப் பிரமானத்திற்கு ஒவ்வாத தொழில்முறையே தடைசெய்யப்பட்டுள்ளதே தவிர சுருக்குவலை தொழில் முறை தடைசெய்யப்பட்டதல்ல என சென்மேரிஸ் கடற்தொழிளாளர் கூட்டுறவுச் சங்க முன்னாள் தலைவர் செபமாலை செபஸ்ரியன் தெரிவித்தார்.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமராட்சி கிழக்கில் சுருக்குவலைத் தொழிலை மேற்கொளவதற்கு உண்மையான காரணம், இந்தியன் இழுவைப் படகுகளால் அடிக்கடி வலைகளை இழந்த நாங்கள் இனிவருங் காலத்தில் இழப்புகளை சந்திக்காமல் தொழில் மேற்கொள்ள வேண்டும் என்பதை ஆராய்ந்தால் வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடி முறை இலகுவாக தென்பட்டது.
தென்பகுதி மற்றும் கிழக்கு மாகாணத்திலிருந்து வந்த தொழிளாளர்களே இத் தொழிலை எமக்குக் கற்றுத்தந்தனர். அது அதிக வருமானத்தை ஈட்ட வழிவகுத்தது.
ஆரம்பத்தில் யுத்தம் பின்னர் சுனாமி தாக்கத்தால் எமது கடற்தொழில் உபகரணங்களை இழந்த நிலை ஏற்பட்டது. இதன் பின் இந்தியா மீனவர்களின் அத்துமீறலால் பெரிதும் பாதிக்கப்பட்டோம்.
வடமராட்சி கிழக்கு சமாசங்களின் முன்னாள் தலைவர் வர்ணகுலசிங்கம் வடமராட்சி கிழக்கில் சுருக்குவலைத் தொழில் மிக மோசமாக இடம்பெறுவதாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
அவர் வடமராட்சி கடற்தொழிளாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவராக இருந்த காலத்திலேயே வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடிக்கும் முறை யாழ் மாவட்டத்தில் அறாமுகமானது.
அவர்களைப் பின்பற்றியே நாங்களும் இத் தொழில் முறையை மேற்கொண்டோம்.
நெத்தலி மீனையோ சூடை மீனையோ அறுவடை செய்வதற்கு குறைந்த கண் அளவுடைய வலைகளைப் பயன்படுத்த வேண்டிய தேவையுள்ளது. இவ் வலைகளை உற்பத்தி செய்யும் கம்பனிகளிடமிருந்து வலைகளை பெற்று அரசாங்கமே விநியோகிக்கின்றது.
இவ் வலைகளைத் தடுக்க வேண்டுமாயின் வலைகளை உற்பத்தி செய்யும் கம்பனிகளின் செயற்பாட்டை நிறுத்த வேண்டும்.
இலங்கையில் வாக்களிக்கும் உரிமை முறை காணப்படுவதால் அனைவருக்குப் பின்னாலும் ஏதோ ஒரு கட்சி இருக்கும்.
அதை தவறாக புரிந்துகொண்டு கட்சிக்காரர்களுக்கு சுருக்குவலை தொழிலை அனுமதித்துவிட்டு கடற்தொழில் அமைச்சர் கண்மூடிக்கொண்டிருக்கின்றார் என கூறுவதானது பொருத்தமற்ற விடயம்.
இவ்வாறு பொறுப்பு வாய்ந்தவர்கள் பொறுப்பற்ற விடயங்களை ஊடகங்களுக்குத் தெரிவித்தலானது ஏழைத் தொழிளாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். எமது பிரச்சினைகளை பல அதிகாரிகளுக்கு கடிதம் மூலமாக அறிவித்துள்ளோம்.
தங்க நகைகள் உட்பட பெறுமதியான பொருட்களை அடகு வைத்து அதிகளவான பணத்தை மூலதனமிட்டே இத் தொழில் முறையை மேற்கொண்டு வருகின்றோம்.
இத் தொழிலை உடனடியாக நிறுத்தும்படி பணித்தால் கடனை எவ்வாறு நிவர்த்தி செய்வது கடினமாகும். அக் கடனை நிவர்த்தி செய்யும் வரை இத் தொழிலை அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். – என்றார்.