திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெறும் நடமாடும் சேவை..!samugammedia

திருகோணமலை மாவட்ட செயலகம் , நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் தனிநபர்களின் சட்ட ஆவணங்கள் தொடர்பான சிக்கல்களை தீர்ப்பது மற்றும் வேறு சட்ட உதவிகளை வழங்குவதற்குமான நடமாடும் சேவையானது இன்று  (26) வெள்ளிக்கிழமை  காலை 9.00 மணிக்கு  திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் ஆரம்பமானது இன்று மாலை 4.00 மணிவரை நடைபெறும். 

ஜனாதிபதி சட்டத்தரணி நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் பங்குபற்றலுடன் நடைபெறும் இந் நிகழ்வில் பலரும் கலந்து  சிறப்பித்தனர்.
இந்தியாவிலிருந்து வருகை தந்து மீண்டும் குடியிருக்கும் இலங்கை அகதிகள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நோக்காகக் கொண்டு இந்நடமாடும் சேவை நடாத்தப்படுகின்றது. ஏனையவர்களும் இந்நாடமாடும் சேவையில் பல சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
குடியுரிமை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், பிறப்பு, விவாகம், இறப்புச் சான்றிதழ்கள் பதிவு செய்வது தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவ் ஆவணங்களை பெற்றுக்கொள்வது தொடர்பானபிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல்,தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வது,திருத்தம் செய்வது மற்றும் காணாமல் போன அடையாள அட்டைகளுக்கான இரண்டாவது பிரதி ஒன்றினை வழங்குவது தொடர்பான சேவைகளை வழங்குதல், காணி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு காணுதல்.
இழப்பீடுகளுக்கான நட்ட ஈட்டினை பெற்றுக்கொள்வது தொடர்பாகவிண்ணப்பித்தவர்களின் கோவைகளில் காணப்படும் குறைபாடுகளை பூர்த்தி செய்தல், காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை நடாத்துதல் மற்றும் அவ் விசாரணைகளுக்கு தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்தல், மத்தியஸ்தம் தொடர்பான விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டத்தினை நடாத்துதல், காணி தொடர்பாக விசேட மத்தியஸ்த சபை தொடர்பான விழிப்புணர்வு வழங்குதல், சட்ட ஆலோசனையை வழங்குதல் மற்றும் சட்ட ஆலோசனை முகாமினை நடாத்துதல் உள்ளிட்ட பல சேவைகளை இடம் பெறுகின்றது.
பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம், குடி வரவு குடியகல்வுத் திணைக்களம், தலைமைப் பதிவாளர் திணைக்களம், மாகாண காணி ஆணையாளர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம்,காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம், மத்தியஸ்த சபை ஆணைக்குழு மற்றும் சட்ட சபை ஆணைக்குழு ஆகிய நிறுவனங்கள் இதில் பங்கெடுக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *