வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இரவு நேரங்களில் பெண்கள் தனியாக இருக்கும் வேளையில் விசாரணைகள் மேற்கொள்வதாக பொலிஸார் வீடுகளில் புகுவது வழக்கமாக உள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(07)உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கு பகுதிகளில் பொலிஸ் சீருடை இன்றி சிவில் உடைகளில் வந்து தொடர் பரிசோதனைகளை மேற்கொள்வது வழக்கம்.
இவ்வாறானதொரு சம்பவம் எனக்கும் நடத்துள்ளது. நானும் அவர்களோடு முரண்பட்டுள்ளேன்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே இவ்வாறு என்றால் சாதாரண மக்கள் என்னவெல்லாம் முகம் கொடுப்பார்கள்.
இந்த வகையில்தாம் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அடையாள அட்டையை காட்டுமாறு கேட்டிருந்தார்.
ஏனெனில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தந்தையை கொழும்பில் வைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அப்போது சண்டே லீடர் பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது.
எனவே இவ்வாறான ஒரு நிலையில் சிவில் உடையில் சிலர் தன்னை கண்காணிப்பது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு சந்தேகம் இருப்பது சாதாரணமாக விடயம்.
இதற்கு முன்னர், பாரிய குற்றச்சாட்டுக்கு உள்ளான பாராளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வுகளுக்கு சமூகமளிக்க அனுமதி வழங்கிய நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுக்கு சமூகமளிக்க சபாநாயகர் அனுமதி அளித்திருக்க வேண்டும் என சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

