யாழ், மாவட்டத்தில் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு மிக அவசியம்- சிவபாலசுந்தரம் தெரிவிப்பு! samugammedia

யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகள், குழு மோதல்கள், சட்டவிரோத போதை பொருள் கடத்தல், கால்நடைகள், மணல் கடத்தல் போன்றவற்றை தடுப்பதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு மிக அவசியம் என புதிதாக பதவியேற்றுள்ள யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதியிடம் எடுத்துரைத்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரம் தெரிவித்தார். 

யாழ்ப்பாண மாவட்டத்தின் இராணுவ கட்டளை தளபதியாக புதிதாக பதவி யேற்றுள்ள மேஜர் ஜெனரல் சுஜீவ  கெட்டியாராச்சி இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு தரப்பின்  ஒத்துழைப்பு மிக மிக அவசியம். மேலும் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபன காணியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறியில் நிலையில் சீமெந்து கூட்டுத்தாபனந்திற்கு  சொந்தமான  பொருட்கள் களவாடப்படுவதாக பல முறைப்பாடு கிடைத்துள்ளன எனவே இராணுவத்தினர் அதனை தடுத்து நிறுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

இராணுவத்தினர் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட காணிகள் பல அளவீடு செய்யப்படாது பொதுமக்களிடம் கையளிக்கப்படாமல் உள்ளது. குறித்த காணிகளையும் விரைவில் அளவீடு செய்யும்  நடவடிக்கையில் உரிய சம்பந்தப்பட்ட திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இராணுவத்தினர்  அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

குறிப்பாக மீள்குடியேறிய மக்களுக்கு இராணுவத்தினரால் 700ற்கும்  மேற்பட்ட வீடுகள் இராணுவத்தினரின் பங்களிப்போடு கட்டி முடிக்கப்பட்டுள்ள அதேபோல் எதிர்வரும் காலத்திலும் மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டு தேவைகள் மற்றும் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்ய இராணுவத்தினர் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் தான் கோரியதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *