எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் வடகிழக்கிற்கு விசேட நிதியொதுக்கீடுகளை செய்து விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
ஜனாதிபதி மற்றும் விவசாய அமைச்சர் இணைந்து வடகிழக்கு தொடர்பில் விசேட கவனத்தினை செலுத்திவருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

விவசாய அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா,திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள்,பிரதேச செயலாளர்கள்,விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பு,திருகோணமலை,அம்பாறை மாவட்டங்களில் விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தனித்தனிமாவட்டமாக ஆராயப்பட்டது.
அறுவடையின் பின்னர் நெல்கொள்வனவினை விவசாயிகளுக்கு ஏற்பான தொகையில் நெல் கொள்வனவு மேற்கொள்ளுதல்,விவசாயிகளுக்கான நீர்பாய்ச்சல் குளங்களை புனரமைத்தல்,உரத்தினை உரிய திகதிகளில் பெற்றுக்கொள்ளல்,விவசாயிகளுக்கான காப்புறுதிகளை பெற்றுக்கொள்ளல்,விவசாயிகள் விதைப்பு காலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டது.
இதன் போது விவசாயிகளினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் அவற்றினை நாளை விவசாய அமைச்சர் தலைமையில் நடைபெறும் விசேட கூட்டத்தில் முன்வைத்து தீர்வுகளைப்பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்பாக இலங்கையில் விவசாய நடவடிக்கை காலத்திற்கு முந்திய நிலையில் மட்டக்களப்பில் விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதன் காரணமாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் நெல் கொள்வனவில் விலைகள் சரியான முறையில் மட்டக்களப்பு விவசாயிகளுக்கு கிடைப்பதில்லையென்ற விடயம் இன்றைய தினம் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் அவற்றினை கருத்தில் கொண்டு நடவடிக்கையெடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.
