யாழ்ப்பாணம்- இந்தியா விமான சேவைகள் தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி..!samugammedia

யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவுக்குமிடையில் தற்போது நான்கு தினங்கள் இடம்பெறும் விமான சேவைகளை வாரத்தின் ஏழு நாட்களிலும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விமான சேவைகள் மற்றும்  துறைமுக அபிவிருத்தி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் சுற்றுலாத்துறை முன்னேற்றத்திற்கு விமான சேவைகள் மற்றும் கப்பல் துறை மூலம் பெரும் பங்களிப்பு வழங்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் வடக்கில் காங்கேசன்துறை துறைமுகத்தில் அரசாங்கத்தின் செலவில் 450 மில்லியன் ரூபா செலவில் முனையத்திற்கான கட்டிட நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுள்ளன.

காங்கேசன்துறைக்கான முதலாவது கப்பல் அண்மையில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்தது. இந்தியாவின் சுற்றுலாப் பயணிகள் சுமார் 500 பேருக்கு அதிகமானோர் அதில் வருகை தந்திருந்தனர்.

இந்த கப்பல் சேவையை வாரத்திற்கு ஒரு முறை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு இது சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கிணங்க பலாலி விமான நிலையத்தை நாம் நிர்மாணித்து வழங்கியுள்ளோம். வாரத்திற்கு நான்கு தினங்கள் விமான சேவைகள் இடம் பெறுகின்றன.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை விமானப்பயணச் சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அந்த விமான சேவையை 7 நாட்களுக்கும் தொடர்வதற்கு நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

வேறு விமான சேவை நிறுவனங்களும் விமான சேவைகளை முன்னெடுப்பதற்கு முன்வந்தால் அதற்கு அனுமதி வழங்கவும் நாம் தயாராகவுள்ளோம்.சென்னைக்கும் பலாலிக்குமிடையில் அந்த விமான சேவைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பாரிய விமானங்களை அங்கு தரையிறக்கும் வகையில் விமான ஓடுபாதைகளை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

அது தொடர்பில் நாம் சம்பந்தப்பட்டவர்களுடன் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அதற்கான முன்னோடி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *