தமிழர் போராட்டங்களை நீதிமன்றத்தின் மூலம் அச்சுறுத்த விளையும் பொலிஸார்…! சிறீதரன் எம்.பி பகிரங்கம்…!samugammedia

அண்மைக் காலமாக தமிழர்களின் உரிமைகள் குறித்து பேசுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களுடன், ஊடகவியாளர்கள் தாக்கப்படுவதும் அல்லது அவர்கள் விசாரணைக்காக அழைக்கப்படுவதும் நிகழ்ந்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி யாழ் மாவட்டத்தில் மக்கள் தன்னெழுச்சியாக  இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிராகவும் மற்றும்  தமிழ் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டமைக்கு தமது கருத்துக்களை வெளியிடும் வகையிலாக மேற்கொள்ளப்பட்ட  வெகுஜன போராட்டத்தில்  மக்களோடு மக்களாக கலந்து கொண்டமையை ஆட்சேபித்து பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜாவின் மோதாவில் நீதிமன்றத்திலே 3 ஆவது தடவையாக நடைபெற்றது.

இந்த முறை வழக்கில் என்னை தவிர்த்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வருகை தரவில்லை. அதனை நீதியரசர் ஒரு கேள்வியாக எடுத்திருந்ததுடன் அடுத்த முறை வழக்கிற்கு அவர்களும் வருகைதர வேண்டும் எனக் கூறி இந்த வழக்கினை செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இந்த வழக்கின் அடிப்படையில்,  தமிழ் மக்களின் இறைமை தொடர்பில் அவர்கள் இழந்து போன உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில்  மேற்கொள்ளப்பட்ட அந்த போராட்டம் நியாயமானது.

இலங்கைக்கு கிடைத்த சுதந்திரம் என்பதும் , அதன் சுதந்திரதினம் என்பதும் தமிழர்களை பொறுத்த  மட்டில் கரிநாள். அதனை வெளிப்படுத்தும் மக்கள் போராட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளாக நாமும் கலந்து கொண்டோம். அதை ஒரு குற்றமாகவே பொலிஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

அண்மைக் காலமாக தமிழர்களின் உரிமைகள் குறித்து பேசுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்படுவதும், ஊடகவியாளர்கள் தாக்கப்படுவதும் அல்லது அவர்கள் விசாரணைக்காக அழைக்கப்படுவதும் நிகழ்ந்து வருகின்றது.

அத்துடன் எம்மால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை நீதிமன்றத்தால் பொலிஸார் அச்சுறுத்துவதையே காண முடிகின்றது எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *