பிரபாகரனின் உயிரிழப்பை இலங்கை அரசு இதுவரை நிரூபிக்கவில்லை…!கே.வி.தவராசா காட்டம்..!samugammedia

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்தார் என்பதை இலங்கை அரசு நிரூபிக்கவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

விடுதலை புலிகளை தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரபணு தொடர்பான அறிக்கையை வழங்க முடியாது என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். அவர் இறந்து விட்டார் என்பதை இந்த அரசு நிரூபிக்கவில்லை. அத்துடன் அவர் இறந்தமைக்கான மரண சான்றிதழும் இந்த அரசினால் இது வரை வழங்கப்படவில்லை.

நீதிமன்றத்தில் கதிர்காமர் கொலை வழக்கு இடம்பெற்ற பொழுது, நான் முன்னிலையாகி இருந்தேன். அங்கு ஒரு அதிகாரியினுடைய அறிக்கையைத்  தான் சமர்ப்பித்தார்கள். அதற்கு நான் ஆட்சேபனை தெரிவித்திருந்தேன்.

அதிகாரியினுடைய அறிக்கையை கொண்டு மரணத்தை உறுதிப்படுத்த முடியாது. ஒருவர் இறந்தால் அதை மரண சான்றிதழ் மூலமாகவே உறுதிப்படுத்த முடியும் என நான் வாதத்தினை மேற்கொண்டிருந்தேன்.

மரண சான்றிதழ் இல்லாவிட்டால் ஒருவர் இறந்து விட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தேன். இருந்த போதிலும் இன்று வரை மரண சான்றிதழ் வழங்கப்படவில்லை. இந்த அடிப்படையில் பிரபாகரனின் மரபணு அறிக்கை விடயம் வழங்கப்படவில்லை.

பிரபாகரனின் இறப்பிற்கு மரண சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். தேசிய கண்காணிப்பிற்கு மரபணு அறிக்கைக்கு என்ன சம்பந்தம் என்று புரியவில்லை எனவும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *