தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பஸ் கட்டண அதிகரிப்பு அவசியமில்லையெனத் தெரிவித்துள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், கொரோனா தொற்றுப் பரவல் காலத்தில் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதால் புதிய திருத்தம் மேற்கொள்வது பொருத்தமற்றது என வலியுறுத்தியுள்ளது.
அதற்கமைய, 7 சதவீதத்தால் பஸ்கட்டணத்தை அதிகரிக்க போக்குவரத்துச்சபை பரிந்துரைத்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்
கொழும்பில் நேற்று (29)இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
நாளையுடன் (01) வருடாந்த பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்தக் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தேசியக் கொள்கையிலுள்ள மூலோபயங்களின் அடிப்படையில் பல்வேறு காரணங்களைக் கொண்டு பஸ் கட்டண அதிகரிப்பு, குறைப்பு இடம்பெறுகின்றன.
கொள்கைகளின் அடிப்படையில் பஸ் கட்டணம் தயாரிக்கப்பட்டதன் பின்னர் 7 சதவீத அதிகரிப்புக்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு அறிவிக்கப்பட்டது.
சங்கமென்ற அடிப்படையில், 7 சதவீத பஸ் கட்டண அதிகரிப்பை அதிகரிக்கவேண்டிய அவசியமில்லை என்று தேசிய போக்குவரத்துச் சபைக்கு அறிவித்திருக்கிறோம்.
அதற்கு காரணம், கொரோனா காலத்தில் 20 சதவீத கட்டண அதிகரிப்பு இடம்பெற்றிருந்தது. இதற்கிடையில் 10 வீத கட்டணக் குறைப்பை மேற்கொண்டிருந்தோம். மேலும் 10 வீத குறைப்பு மேற்கொள்ளவேண்டியிருந்தது.
ஆனால், அதனைச் செய்யவில்லை. எனவே, தற்போது மேற்கொள்ளவேண்டியுள்ள 7 சதவீத அதிகரிப்பை கொரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விலைச் சூத்திரத்துடன் இணைத்துக்கொள்ளுமாறு அறிவித்திருக்கிறோம்.
தேசிய கொள்கையிலிருக்கும் சம ஒதுக்கீட்டில் பிரச்சினை ஏற்படும். அது எதிர்காலத்தில் பாரதூரமான விளைவை ஏற்படுத்தும். தொழிற்றுறையிலும் பாரதூரமான பிரச்சினையை ஏற்படுத்தும்.
அதன் காரணமாகவே இம்முறை பஸ் கட்டண திருத்தமொன்றை மேற்கொள்ளவேண்டிய அவசியமில்லை.
தற்போது நடைமுறையிலுள்ள பஸ் கட்டணத்தையே தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று போக்குவரத்துச்சபைக்கு அறிவித்துள்ளோம்.
மக்கள் சார்பில் சிந்தித்து பஸ் கட்டணத்தை அதிகரிக்காமலிருப்பது தொடர்பில் எங்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. இம்முறை பஸ் கட்டண அதிகரிப்பை மேற்கொள்ளவில்லை.
பிரதேச மட்டத்திலான சங்கங்களும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. தற்போதுள்ள கட்டணத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த்துள்ளோம்.
கிராமிய பிரதேசங்களில் 10 தொகுதிகளைக் கொண்ட சிறயளவான வேன்கள் அல்லது பயணிகளின் தேவைக்கேற்ப வாகனங்களை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளோம்.
மேலும், எதிர்வரும் சில மாதங்களில் பஸ் நடத்துனர்களுடனோ அல்லது இல்லாமலோ பஸ் கட்டண சீட்டினூடாக போக்குவரத்து வசதியைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளோம்.
புதிய பஸ்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதும் அந்த பஸ்களுக்கு நடத்துனர்கள் தேவைப்பட மாட்டார்கள். கட்டண அட்டையைப் பயன்படுத்தி அவற்றில் பயணிக்கக்கூடியதாக இருக்கும்.
மிக விரைவாக இந்த பஸ்களை குறைந்தது மூன்று மாதங்களில் நாட்டுக்கு கொண்டுவர முயற்சிக்கிறோம் என்றார்.
