தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜாவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை இரவு அவரது வீட்டில் சினேகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடினார்.
மூன்று நாள் விஜயமாக யாழ்ப்பாணம் வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின பல்வேறு தரப்புகளையும் சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.
திடீரென இன்றும் இரவு 7 மணி அளவில் வலி வடக்குப் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டதன் பின் வரும் வழியில் மாவட்டபுரத்தில் அமைந்துள்ள தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சயின் வாஸ் குணவர்தன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த சமீர, முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் தகாம் சிறிசேனா, அங்கஜன் இராமநாதனின் பிரத்தியோகச் செயலாளர் சிவராம் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.