இலங்கையில் இளம் குற்றவாளிகளுக்காக விசேட வேலைத்திட்டம்..? samugammedia

குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு தண்டனை பெற்றுவரும் இளம் குற்றவாளிகளுக்கு தற்பொழுது காணப்படும் பொதுவான கல்வி முறையின் கீழ் கற்பிப்பது தோல்வியடைந்திருப்பதாகவும், அவர்களுக்காக ஆன்மீக வளர்ச்சி மற்றும் நடத்தையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என துறைசார் மேற்பார்வைக் குழு சார்பில் கலந்துகொண்ட இளைஞர் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

மேலும், அவர்களுக்குத் தொழிற்கல்வி வழங்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், இதனால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், அதே போல் ஒரு வருட பயிற்சிக் காலம் முடிந்து மீதமுள்ள 2 ஆண்டுகளில் வருமானம் ஈட்டும் முறை போன்றவற்றை அறிமுகப்படுத்துவது, சிறுவர்கள், 3 வருட வதிவிடக் காலப் பயிற்சியை முடித்துக்கொண்டு வெளியேறும்போது பொருளாதார வசதிகளுடன் வெளிச்செல்ல முடிந்தால் குற்றச்செயல்கள் குறையும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் உள்ள வட்டரக்க இளம் குற்றவாளிகள் பயிற்சிக் கல்லூரி மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களம் ஆகியவை நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அழைக்கப்பட்டிருந்தபோதே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

16 – 22 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் குற்றம் செய்ததற்காக குற்றவியல் சட்டத்தின் கீழ் நீதவான் நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்ட இளம் குற்றவாளிகள் இந்த நிறுவனத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள். 

தண்டனைக் காலம் சிறைத்தண்டனை அல்ல, 03 ஆண்டுகள் கட்டாயத் தடுத்துவைப்புக் காலம் என்றும், தடுத்துவைப்பு காலத்திற்குப் பின்னர் சிறுவர்கள் வெளி சூழலில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் வட்டரக்க இளம் குற்றவாளிகள் பயிற்சிக் கல்லூரியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஏ.வி. வஜிரா தமயந்தி தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *