திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீரமாநகர் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி கற்பணியாக ஆக்கிய அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞனை சம்பூர் பொலிஸார் புதன்கிழமை கைது செய்து வியாழக்கிழமை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
குறித்த இளைஞன், சிறுமியை மார்ச் மாதம் அளவில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமியின் உடல் அமைப்பிலும், நடத்தையிலும் சந்தேகம் கொண்ட பெற்றோர் சிறுமியிடம் விசாரணை செய்தபோது தமது பிள்ளை இளைஞன் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பிணி ஆக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து உடனடியாக சம்பூர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பெற்றோர் முறைப்பாட்டை பதிவு செய்ததோடு சந்தேக நபரைப்பற்றி தகவலையும் வழங்கியுள்ளதையடுத்தே இளைஞன் கைது செய்யப்பட்டார்.
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டு கர்ப்பிணியான 14 வயது சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்திருப்பதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

