வடமாகாணத்திலுள்ள அரசியல் தலைமைகள் மக்களை கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறார்கள்..!திலீபன் எம்.பி சுட்டிக்காட்டு..!samugammedia

வடமாகாணத்தில் உள்ள 75 வீதமான அரசியல் தலைமைகளும் மலையக மக்களை கறிவேப்பிலையாக பாவிக்கக்கூடிய சூழ்நிலையே நிலவுகிறது என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபன் தெரிவித்தார்.

வவுனியாவில் மலையக மக்களின் 200வது வருட பூர்த்தி நிகழ்வும், வரலாற்று நூல் வெளியீடும் நேற்று வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது. 
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வடக்கில் இருக்கக்கூடிய தமிழ் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் கொழும்பு செல்லும் போதெல்லாம் எதோ சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கு மட்டும்தான் பிரச்சினை இருப்பது போல அங்கு பேசப்படும். தமிழர்கள், சிங்களவர்கள், சுய நிர்ணயம், உரிமை அவ்வாறு கதைப்பார்கள். ஆனால் வடக்கிலே கால் வைக்கின்ற போது தமிழர்களுக்குள்ளே பல பிரச்சினை இருக்கிறது.
குறிப்பாக மலையக தமிழர், இந்த மலையக தமிழர்கள் தொடர்பாக வந்திருக்கக்கூடிய உறுப்பினர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக 75 வீதமான வடமாகாணத்தில் இருக்கக்கூடிய அரசியல் தலைமைகளும் மலையக மக்களை கறிவேப்பிலையாக பாவிக்கக்கூடிய சூழ்நிலைதான் வடமாகாணத்தில் நிலவுகிறது.
வவுனியா வடக்கில் மலையக மக்கள் இருக்க கூடிய இடங்களில் உள்ள குளங்கள் , வயல்கள் அவர்கள் பாவிக்க முடியாத சூழல். இன்னும் ஆழமாக கூறினால் மலையக மக்கள் இருக்கின்ற குளங்களிலுள்ள மீன்களை கூட பிடிக்க முடியாது. அப்படியான சமுதாயமாக அரச உத்தியோகத்தர்களில் உள்ள முக்கால்வாசி பேர் இந்த மக்களை ஒடுக்க கூடிய நிலை இருக்கிறது. 
நான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மக்களுக்கு என்னால் முடிந்தளவு உதவி செய்வதற்குரிய முனைப்பை காட்டி வருகின்றேன். 
இம் மக்களுக்கு காணி, வயல் இருக்கும் ஆனால் அந்த மக்கள் பயன்படுத்த முடியாது. எல்லைப்புற கிராமங்களில் மக்களை குடியேற்றுவது யானையில் இருந்து தப்பிப்பதற்கு. இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விடயம்.  
முருகண்டி ஆலயத்திற்கு அருகில் இருக்கக்கூடிய ஒரு கிராமம் ஆரோக்கியபுரம்கிராமம். அங்குள்ள மக்கள் மலையக மக்கள் அவர்களுக்கான காணி ஆவணம் முதற்கொண்டு இருப்பதற்கு இடம், மலசலகூடம் போன்ற எந்த வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.
அந்த மக்களை வடக்கத்தயார் என்று சொல்லக்கூடிய சில அரசியல் தலைமைகளை அதே மக்கள் சிலர் மேலான இடத்தில் வைத்து கொண்டாடுவதை நினைக்கும் போது மனம் வேதனையாக இருக்கிறது.
இதே போல பல இடங்களில் பிரிவினைவாதம் தற்போதும் இருக்கிறது. முல்லைத்தீவை எடுத்துக் கொண்டால் அங்கே ஒரு விளையாட்டு மைதானம் 360 விளையாட்டு கழக உறுப்பினர்கள் இருக்கக்கூடிய ஒரு கழகம் பல வருட காலமாக இருக்கக்கூடிய அந்த மக்கள் அந்த மைதானத்தில் விளையாட முடியாது. அங்கே தடை இருக்கிறது. ஆனால் முக்கியமாக முன் நின்று செய்யக்கூடிய கட்சியின் பிரமுகர்கள் கொழும்பிற்கு சென்று தமிழ் சிங்களவர்களை பற்றி கதைக்கிறார்கள். ஆனால் இங்கு இருக்கக்கூடியவர்களை மைதானத்தில் விளையாட விடாமல் தடை செய்ய அவரே காரணமாக இருக்கின்றார்.
25 வீதமான சுதந்திரமும் மலையகவாழ் மக்களுக்கு இங்கு கொடுக்கப்படவில்லை. அதே நேரம், மலையக மக்களில் இருந்து மலையக மக்கள் என்று கூறி முன்னேறியவர்கள் பல இலட்சாதிபதி, கோடிபதி ஆகியவர்கள் கூட இன்றைக்கு தாங்கள் மலைய மக்கள் என்பதை தவிர்த்து வருவதை இன்றைய கூட்டம் வெளிப்படையாக காட்டி நிற்கின்றது .
நான் கிராமம் கிராமமாக சுற்றி வருகின்றேன். குறிப்பிட்டு மலையக மக்கள் இருக்கிறார்களா என்றால் காணி ஆவணம் இல்லாத இடம், குளம் , வயல் இருந்தும் செய்யாத இடம் இவ்வாறான இடங்களை பார்த்தால் அது மலையக மக்கள் இருக்கின்ற இடமாக தான் இருக்கும் என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *