திருகோணமலையில் மாண்புமிகு மலையகம்" நடை பயணம் ஆரம்பம்! samugammedia

தென்னிந்தியாவிலிருந்து பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, இலங்கையின் காடுகளாய் இருந்த மலையகத்தை வளம் கொழிக்கும் பூமியாக மாற்றிய “மலையக மக்கள்”, இன்றும் தங்களுடைய உரிமைகளை பெறுவதற்காக போராடி வருகின்றனர். 

அந்த வகையில் அவர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு இருநூறு ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, அவர்களது நீண்ட, நெடிய பயணத்தை நினைவு கூறும் வகையில் பல்வேறு விடயங்கள் “மலையகம் 200” என்ற தொனிப் பொருளில் இடம் பெற்று வருகின்றது. 

அந்த வகையில் “மாண்புமிகு மலையகம்” என்ற நடைபயணம் வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட தலைமன்னாரில் இருந்து மலையகம் நோக்கி இடம்பெற்று வருகின்றது. 

அதில் திருக்கோணமலை வாழ் மக்களாக எங்களுடைய தார்மீக ஆதரவையும் அளிக்க வேண்டிய தேவை உள்ளது. அந்த அடிப்படையில் திருக்கோணமலை மாவட்ட சிவில் சமூக  ஒன்றியத்தில் பங்கு கொள்ளும் அமைப்புகள் ஒன்றிணைந்து, 01.08.2023 அன்று தங்களுடைய பங்களிப்பை நடை பயணத்தில் வழங்கியிருந்தனர். 

இதன் போது சுமார் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்ததுடன், முருங்கன் தொடக்கம் மடு வரையிலான பகுதியை நடந்து இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் மலையக மக்களின் துயர், அவர்களின் உரிமைப் போராட்டம், வரலாறு தொடர்பில் பல்வேறுபட்ட விடயங்களை ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்த, மலையகம் சார் மக்களிடமும், அனுபவசாலிகளிடமும் அறிந்து கொண்டனர். 


பின்னர் மடு சந்திக்கு அருகில் உள்ள தேவாலயத்தில் அனைவரும் ஒன்று கூடி, மலைய மக்களின் இன்றைய நிலை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர். 

மலையக மக்களின் உரிமைகள், அவர்கள் இன்று எதிர்நோக்கும் சவால்கள், இந்த நடை பயணத்தின் நோக்கம் என்பவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மேலும் திருக்கோணமலை சேர்ந்த அமைப்புகளின் ஒத்துழைப்பு அவர்களுக்கு  கிடைத்ததை எட்டி தங்களுடைய மகிழ்ச்சியையும் தெரிவித்தனர். 

மேலும் திருக்கோணமலை வாழ் மக்களாக மலையக மக்கள் தொடர்பில் அதிக புரிதலை ஏற்படுத்த வேண்டியது கட்டாயமானதாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *